Saturday, September 20, 2014

நினைவு சூழ் தனிமை-3

தொலைத்த முகவரியின் முதல் வரி நீ.

காதலெனும் பெருங்குற்றம் மறந்தும் 
மரணமெனும் மன்னிப்பை தருவதில்லை, 
மாறாக நினைவெனும் ஆயுள்தண்டனை தந்துவிடுகிறது.

எடையற்று மிதக்கும் மேகத்துக்குள் 
அடைமழை ஒளிந்திருப்பதைப் போல் 
கையளவு இதயத்தில் கருங்கல் பாறைகளாய் 
உன் நினைவுகள்.

உன் நினைவு தீண்டாத சில நொடிகளில் 
நான் நானாகவே வாழ்ந்துவிடுகிறேன்.

உன்னை தொலைந்து போ என்றதும் 
வெகுவேகமாய் என்னை தொடர்கின்றன உன் நினைவுகள்.

எத்தனை வேகமாய் உன்னைவிட்டு விலகிப்போகிறேனோ 
அத்தனை வேகமாய் எதோவொன்று உன்னிடமே ஈர்த்துவிடுகிறது.

வெயில் கால எறும்பைப்போல் மனவெளியெங்கும் 
துளிதுளியாய் உன் நினைவை சேகரித்திருக்கிறேன், 
எஞ்சிய ஆயுளை வலியின்றி கழித்திட...

தொட்டுக் கொண்டிருக்கும் நினைவுகளையும் 
துரத்திக் கொண்டிருக்கும் கனவுகளையும் 
தொலைக்கத் தெரியாமல் தவிக்கும் 
என்னை நிரந்தரமாக விட்டுச்செல்.

நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையில் 
ஊசலாட வைக்கிறது,
உயிரற்ற நினைவு.

உன்னை வெறுக்கத் தொடங்கிய மனதில் 
உன் மீதான நேசம் மட்டும் வெளியேறாமல் 
உறங்கவிடாது உறுத்திக்கொண்டேயிருக்கிறது.

கரை தாண்ட துடிக்கும் அலையாய் உன் நினைவுகள், 
நித்தமும் நெஞ்சில் மோதிக்கொண்டேயிருக்கிறது, 
ஒருநாளேனும் உன்னை மறந்திட வேண்டுமென!

தூறல் விழுந்தவுடன் கிளர்ந்த மண்வாசனையாய் 
தூரத்தில் காற்றில் மிதந்து வந்த பாடல் 
உன்னை ஞாபகப்படுத்தி, 
கண்ணில் பெருமழையைத் தந்துசெல்கிறது

வறண்ட நிலத்தில் சாபமாய் விழும் 
தூறலைப் போலவே 
நீயில்லா நாட்களில் 
சந்தோசமாக இருப்பதாக காட்டிக்கொள்ள பிரயத்தனப்படுவதும்.

உன்னைப் பற்றி எழுதிய வார்த்தைகள் 
அர்த்தங்களை மட்டுமல்ல 
நமக்கான உணர்வுகளையும் சுமந்துகொண்டிருக்கிறது.

நீயில்லா தனிமையின் வெற்றிடம் தான்,
நீ நிரம்பியிருந்த என் உலகத்தை காட்டிக்கொடுக்கிறது.

திசைமறந்த பறவையொன்று 
முறிந்த சிறகு வழி, விரிந்தவானம் பார்ப்பதைப்போல் 
உன்னோடு வாழத்துடிக்கையில், 
உணரும் நீயில்லா நிதர்சனம்,
கொடுமையன்றி வேறென்ன.

விடை கொடுத்து பிரிகையில் நழுவும் கைகளினிடையே,
மெல்ல மெல்ல அதிகரிக்கும் தூரம் 
சொல்லாமல் சொல்லும், 
நீயில்லா என் தவிப்பை ....

முள்தைத்த காலில் முத்தமிட்டு தூக்கிச் சுமந்ததெல்லாம்,  
நெஞ்சை கிழிக்கும் தீரா ரணமாய் பிரிவை பரிசளிக்கவோ?

கடைசியாய் பேசிப் பிரிந்த நாளில்,
வலிமிகுந்த உன் குறுஞ்சிரிப்பு- 
என் வாழ்நாளுக்கான சாபம்!

நீ பிரிந்த பின்பு எந்தவொரு உறவும் 
நிச்சயமெனவோ நிலைக்குமெனவோ 
நம்புவதில்லை.

Wednesday, August 6, 2014

மோகத்திணை

முத்தமும் முத்தம் சார்ந்த தேடலும் மோகத்திணை  
  
உன் ப்ரியசகியாகிட வேண்டி
உன் ப்ரியம் கேட்கும் யாசகி நான்..

உன்மீதான அதீத பிரேமையினால்
அண்டவெளியெங்கும் உன்னைப்போலவே பிரமை.

சிமிட்டிடும் இமை நடுவே நிழலாடும்
உன் சிரித்த முகம் என் வாழ்நாள் வரம்
  
முன்நெற்றி விழும் முடியொதுக்கிவசீகரமாக  சிரித்துத் தொலையாதே,
இதயம் ரிக்டர் அளவுகளில் துடிக்கிறதெனக்கு.

உன்னைக்காணததுபோல் செல்ல யத்தனிக்கையில், 
மூன்றாம் பிறையொத்த  முன்நெற்றி சுருளொன்று, 
என்கவனம் களவாடி பார்வையீர்த்து காட்டிக் கொடுத்துவிடுகிறது,

அங்கங்கே விரவிக்கிடக்கும் சொற்களைவிட, 
எங்கும் வியாபித்திருக்கும்  மெளனத்தின் அழகாக
ஆயிரம் ஆண்களுக்கிடையில் சாலையைக் கடக்கும் நீ! 

என்னை கடந்து செல்கையில் நீ வீசும்  ஓரப்பார்வையால், 
என் அகத்தில் ஆயிரம் கலகம்  உருவாகி ஓய்ந்துவிடுகிறது.
  
எத்தனை வேகமாய் உன்னைவிட்டு விலகிப்போகிறேனோ 
அத்தனை வேகமாய் எதோவொன்று உன்னிடமே ஈர்த்துவிடுகிறது.

கள்ளத்தனமாய் பார்த்து உன்னிடம் மாட்டிக்கொள்ளும்போதெல்லாம்,
அந்திமாலைப்பொழுதில் அடர்வனத்தில் 
திசைமாறிய பறவையாய் தடுமாறிப்போகிறதென் பார்வை

 முகத்தில் நாணத்தின் செவ்வர்ண ரேகையுடன்
மனதில் விவஸ்தையற்ற அவஸ்தைகளை தரும்
அக்கணத்தில், என் மீதான உன் ஆளுமையை மிக அதிகமாக ரசிக்கிறேன்!
  
உந்தன் சின்னசின்ன ஆச்சர்யங்களில் 
இன்னுமின்னும் நீட்டிக்கிறது 
நம் காதலின் ஆயுள்.
  
ஈரக் குழல் நுழைந்த காற்றாய் 
தேகம் சிலிர்க்க வைக்கிறது
எதிர்பாராது நீ சிந்தும் இளநகை .
  
உன்னைச்சந்திக்க தயாராகையில் 
உனக்குபிடித்தமானவற்றைத் தேடித்தேடி அணிகின்றேன்,
நீவிரும்பாததென்று அறிந்தும் விட முடியாமல் 
வெட்கத்தை கைப்பற்றியபடி

உன்னோடு உரையாடும் இளமாலை பொழுது
இன்னும் தொடராதோ இந்தச் சாலையின் நீளம்
அப்படியே இந்த நொடி உறைந்திடாதோ   உள்ளம் ஏங்கிடும் நாளும்!

வழித்துணை நீயெனில்,
பாதையின் நீளமோபயணத்தின் களைப்போ,
வரமே எனக்கு !

 நானும் அவனுமாக கழிக்க நினைக்கும் காதல் பொழுதுகள்
நாணமும் அவனுமாக கடந்து போய்விடுகிறது.

உன் பார்வை எனை ஆளத்தொடங்கும் நொடியில்
பேச்சற்றுப் போகிறதென் கூச்சம்

ஆயுள்ரேகை பார்க்கிறேனென நீ கைப்பிடித்த நொடியில்
வெட்கரேகை பாய்கிறது என் முகத்தில்

எதேச்சையாய் பட்ட விரலொன்றினால் 
வீணையின் தந்திகள் அதிர்ந்தடங்குவது போல்,
தேகம் அதிர்ந்தடங்குகிறேன் சாலையைக் கடக்க நீ விரல் பிடித்த நொடியில்.

சாரல்மழையில்உன்னிரு கைகளில் நீ எனக்கும்
சேலைத்தலைப்பால் நானுனக்கும் குடைபிடிக்க
நமக்கு குடைவிரித்துச் சிரிக்கிறது காதல்.

பெருமழையில்நனைந்தபடி உன்னுடன் அலைபேசியில் பேசிசெல்கிறேன் 
கதகதப்பாக்கிகொண்டிருக்கிறது உன்குரல் 
தீமூட்டிக் கொண்டிருக்கிறது உன்வார்த்தைகள்

உன் பார்வை அத்துமீறும் போதெல்லாம் வேலியாய் என் வெட்கம்

ஒற்றை முத்தத்திற்காக நீ  கெஞ்சும்போதெல்லாம் 
பெண் என்னும் கர்வம் என்னுள் 
சற்றுத் தலைதூக்கி சிரிப்பது உண்மைதான்
  
வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய் என்றான்,
சத்தமில்லாமல் வேகமாக ஒரு முத்தம் தந்தேன்.

எதிர்பாராமல் உன் தோளோடு மோதிய நொடியில் 
தழும்பாத நிறைகுடமாய் கண்ணியம் காத்து திரும்பி நிற்கிறேன்,
மனம் குறைகுடமாய் கூத்தாடிக்கொண்டிருக்கிறது.

கேசத்தில் இழைந்தோடும் அவன் கைகளால்,
அந்திவானத்தின் சிவப்பாய் நாணத்தில் இழைகிறதென் தேகம்;
அடர்வன மழையாய் மோகத்தில் இழைகிறதென் என் நாணம்
  
என் இடைவருடும் உன்னிரு விரலால் துளிர்க்கும் மோகம்
நீ இரண்டடி விலகியதும் தாபமாய் பெருக்கெடுகிறது.

உன் கைகளுக்குள் அடங்கிடாமல் திமிறுவதே
நீ இன்னும் கொஞ்சம் இறுக்கி அணைக்கத்தான்

கலைந்த கேசத்தில் கைகள் நுழைத்து  
காதல் வாசம் பிடித்துக்களைத்து, மூச்சின் வாசம் உணர முன்னேறுகிறாய் 
தவிர்க்கவா,தழையவா என தயக்கத்தில் நான்.

 உன் கன்னத்தில் பதித்த பின்னர்தான் 
என் இதழில் ரேகையிருப்பதை அறிந்தேன்..

 சில்லென பின்கழுத்தில் விழும் மழைத்துளியால் 
சிலிர்த்திடும் மயிர்க்கால்கள்,
உன் முதல் முத்தத்தை நினைக்கச்செய்கிறது
  
உன் நுனிவிரல் தீண்டல் தூண்டிடும் மோகம்,
தேகம் முழுக்க பற்றியெரிந்து,
ஓர் உஷ்ண பெருமூச்சில்
மடிந்து வெளிவரும் நானறியாமல்
  
எலும்பை ஊடுருவும் குளிரென கூசச் செய்கிறது
என் முதுகு துளைக்கும் உன் பார்வையும்,ஸ்பரிசமும்!
  
உன்மத்தம் பிடிக்கச் செய்கிறதுஉன் முத்தம்

சோவென பெய்யும் மழை,
மண்வாசத்தோடு,அன்றொரு மழைநாளில் நீ பொழிந்த 
முத்தச்சூட்டின் ஞாபகங்களையும்  சேர்த்து கிளர்ந்திட செய்தது.

காய்ச்சல்கொதிக்க தலைபாரத்தோடு இருந்தவனின் 
நெற்றியொற்றிப் பார்த்து,“ஒத்தடம்தரவா என்றேன்,
உன் “உதட்டு தடம்” கொடு சட்டென சரியாகும் என்கிறான்.

என் வெட்கங்களைச் சந்திக்காமல்
என்னை அடைவதில்லை 
உன் முத்தங்கள்

நீ சுவைக்க எனக்கு திகட்டுகிறதுஇதழ் முத்தம்.

அட எப்படிச் சொல்வதுனக்கு,
எத்தனை பெரிய ஊடலும் என்னை பேசவிடாது செய்யும் 
இந்த ஒற்றை முத்தத்திற்குத்தான் என
  
உடலின் அத்தனை பாகங்களும் செயலிழந்து 
உதடுகள் மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருந்தது
அந்தமழைநாளின் முத்தத்தில்

ரகசியமமொன்றைச் சொல்லி விலகிடும் நொடியில்
பின்கழுத்தில் உந்தன் உஷ்ணமான மூச்சு
என்னுள் வெட்கச் சலனம் ஏற்படுத்தி ஓய்கிறது.
  
ஜன்னலோர இருக்கையில்
கண்ணாடியைத் தழுவியோடும் மழைநீரை 
கைபடாது தீண்டி உணர்வது போல் 
உஷ்ணம் சுமந்த உன் பார்வைகள்
என் இளமை தீண்டி செல்கிறது.
  
உணர்ச்சிவசப்படாது பார்த்துக்கொள்கிறேன்,
உன் வசப்படாமல் இருக்கத்தான் போராட்டமே

Saturday, June 7, 2014

நினைவு சூழ் தனிமை-2

பிரபஞ்சம் ஏகாந்தமாயிருந்தது,பதின்ம பிராயத்தில் 
காதலென்றொரு பிரளயம் கடக்காதவரை !

*********************************************************************************

விழிப் பிழையென்பேனா, விழாமல்தான் போவேனா, 
காதலெனும் படுகுழி -கைநீட்டி எனை அழைக்கையிலே!

*********************************************************************************

ஆகச்சிறந்த சுயநலவாதி நான், உன் அன்பை பெறுவதில்.

*********************************************************************************

மலைமுகட்டில் நின்று, மேகத்தைப்பிடித்து, 
காதல்வானில் கலந்துவிட யத்தனிக்கையில்,
யதார்த்தமெனும் பாதாளம்,
தன்னிரு பெருங்கரங்கொண்டு இழுத்துவிடுகிறது.

*********************************************************************************

மெல்லமெல்ல சாகத்துணிந்தவனின் 
நெடுநாளைய தற்கொலை முயற்சி--காதல்!

*********************************************************************************

பிரபஞ்சத்தில் கடந்துசென்ற, எத்தனையோ பேர்களில்,
ஓருவனாக நீயிருந்திருந்தால், இதோ கசிந்துகொண்டிருக்கும் 
இந்த நிமிடத்தில் நான் நிம்மதியாயிருப்பேன்.

*********************************************************************************

கண் பார்க்கும்போதே கை நழுவிப் போனாய், காற்றைப் போல ;
கண்ணீர் கொண்டு கைப்பற்றத் துடிக்கிறேன் நான்.

*********************************************************************************

வார்த்தை தேடி தோற்று,மெளனத்தின் சாட்சியாய்,
துளி கண்ணீர் சிந்தி நகர்கிறேன்-உந்தன் கோபத்தின் முன்.

*********************************************************************************

தொலைஞ்சு போவென நீ தீட்டித்தீர்க்கையில்,உனக்குள்ளேயே தொலைந்து,பார்வை உன்னில் நிலைக்க தன்னிலையுணர்ந்து, அசட்டுத்தனமாய் சிரித்த காலங்களும் உண்டு

*********************************************************************************

உன் வசையின் இசையின்றி உறக்கம் பிடிபடவில்லை, 
சண்டையிடு; சத்தமில்லாமல் கொல்லாதே!

*********************************************************************************

கைக்குழந்தை எதற்கு அழுகிறதெனத் தெரியாமல்,
பதறும் தாயாய் பதறுகிறேன்;
உன் கோபத்திற்கான காரணம் புரியாதபோது!

*********************************************************************************

அடர்வனத்தில் வழிமறந்த பறவையின் கதறல்,
இடையனொருவனின் புல்லாங்குழல்,
இசையால் மறக்கடிக்கப்பட்டாற்போல் உன்சந்தோசங்களுக்காக மறக்கப்பட்டன என்ஆசைகள்.

*********************************************************************************

இன்றைக்கும் நாளைக்கும், 
இடைப்பட்ட இந்த நொடியைப்போலவே, 
உன்நினைவுகளும் என் கனவுகளுமாக, 
உறங்கிப் போகவே விரும்புகிறேன் #11.59PM

*********************************************************************************

உன் நினைவுகளின் கனம் தாளாமல்,
கனவுகளில் புதைந்துவிடுகிறேன்- ஒவ்வொரு இரவும்.

*********************************************************************************

தூக்கம் வற்றிய கண்களில், தழும்பிடும் கண்ணீர்
இரவுக்குச் சொல்லிடும் கதைகள் ஏராளம்.

*********************************************************************************

உறக்கத்தோடு உறவாடும்வேளையில் கூட,
இரக்கமேயில்லா காதல், இமைகளின் நடுவே நின்று கொல்கிறது.

*********************************************************************************

நீ விட்டுச்சென்றாயென அழுது ஓய்ந்ததைவிட,
உனக்காகவே கருக்கொண்ட ஆசைகளையும்,காதலையும்
சிசுக்கொலை செய்ததுதான், 
நித்தமுமென் நித்திரை சிதைக்கிறது.

*********************************************************************************

அந்த மழைநாளில்,அழுதபோது 
கொஞ்ச கொஞ்சமாய் கரைந்தது என் கண்மை மட்டுமல்ல;
உன்னைப் பற்றிய கசப்பான உண்மையும்!

*********************************************************************************

கள்வனே, கனவுகளைத்தான் திருடி,
உன்னுடையதாக்கிக் கொண்டாய்.
தூக்கத்தையாவது கொடுத்துவிடு.

இப்படிக்கு,
உன் புகைப்படம் பார்த்தபடி இறைஞ்சும் விழிகள்!

*********************************************************************************

அகத்தின் அடியாழத்தில், 
ஆர்ப்பரிக்கும் அத்தனைக்கும் அவசரத்தேவை, 
ஆதரவாய், சாய்ந்திடவொரு தோளன்றி வேறென்ன  

*********************************************************************************

பனிக்கட்டியாய் உறைந்திருக்கும்,
எந்தன் அத்துனை கோபமும்,
உன்னிரு உள்ளங்கை சூட்டில் உருகுவதை எதிர்நோக்கியே.

*********************************************************************************

எப்போதும் தனிமையில்,
விழிவிளிம்பில் அடர்வுமிகு கண்ணீரும்,
நெஞ்சையழுத்தும் துக்கமும்,வெளியேற துடித்தபடி,
ஆதரவாக உந்தன் தோள்தேடிக்கொண்டிருக்கிறது.

*********************************************************************************

பயணத்தின் ஜன்னலோர நிலவைப் போலவே நீயும். 
நீ, உன்னிடத்திலேயேதான் இருக்கிறாய்,
வழித்துணை என்றெண்ணியே, நான் பயணத்தை தொடர்கிறேன்..

*********************************************************************************

உந்தன் ஆயிரம் குறைகளை மறைக்க ,
உன்னை நேசித்த ஒரே காரணம் போதுமாயிருக்கிறது.

*********************************************************************************

எதிர்படுவோரிடமெல்லாம்,
உன் சாயலைத் தேடித்தேடி தோற்க்கிறேன்; 
உனக்காக காத்திருக்கும் வேளைகளில்.

*********************************************************************************

தனிமை,குளிர், இழையோடும் மெல்லிசை,
ஒவ்வொன்றும் நீயில்லாத பொழுதுகளில்;
உன் நினைவின் இருப்பை  உணர்த்திக் கொண்டேயிருக்கிறது.

*********************************************************************************

நெருக்கமானவார்கள் விட்டுச்செல்லும் போதெல்லாம்,
கொஞ்சம் நினைவுகளையும், நிறைய கவிதைகளையும் 
தந்துவிட்டு போகிறார்கள்.

*********************************************************************************

உன் நினைவுத் தீயில் குளிர்காய்வது இதமாகத்தான் இருக்கிறது, 
அது, என் நிகழ்காலத்தை எரிக்காத வரை!

*********************************************************************************

என் வாழ்நாளின் பேராசையெல்லாம்,
உன் நினைவு தீண்டிடா ஓரிரவை;
தனிமையில் ஏகாந்தமாய் கடந்திட வேண்டுமென்பதே!

*********************************************************************************