Saturday, February 15, 2014

காதலும் கற்று மற

மெத்தையின் வலப்பக்கம் முழுதும் வெற்றிடமாக, தன் மொத்த தேகமும்,கணவனின் கைகளுக்குள் அடங்க தன் கேசத்தை கணவனின் நெஞ்சில் பரப்பித்,  தன் தலைசாய்த்து உறக்கத்தை விட்டு விலக  முயற்சித்துக்கொண்டிருந்தாள் ஸ்வேதா.

ஜன்னல்வழி கிடைத்த இடைவெளியில் சூரியன் தன் செங்கதிர் அனுப்பி,அந்த  அறையின் அழகைக் கூட்டியிருந்தான். அவள் முடி ஒதுக்கி உச்சந்தலையில் மென்மையாக முத்தமிட்டான் கெளதம். மெல்ல புன்னகைத்து அவனை விலக்கி குளித்துவிட்டு வந்தாள், அசந்து தூங்கிக்கொண்டிருந்தவனின் அழகை ரசித்தாள். திருமணமாகி 2 வருடம் முடிந்துவிட்டது.இன்னமும் புதுமணத் தம்பதிகள் போல் அன்னியோன்யமாய் இருந்தனர் இருவரும்.

கிச்சனில் நுழைந்து, இஞ்சியும் ஏலக்காயும் மணக்க ஸ்ட்ராங்காக டீ போட்டு கப்பில் ஊற்றிக்கொண்டே “கெளதம் டைம் ஆச்சு, எழுந்திரு” அவனை எழுப்ப சத்தம் போட்டாள்.

அவள் குரல் காதில் கேட்டதும் அரைகுறையாயிருந்த பெட்ஷீட்டை இழுத்துப் போர்த்திக்கொண்டு இன்னமும் நன்றாக தூங்கினான்.எப்பவும்போல் அவள் வந்து எழுப்பட்டும், அப்படியே ஈரம் சொட்ட அவள் வாசம் பிடித்து கட்டிக்கொள்ளலாமென நினைத்துக்கொண்டே படுத்திருந்தான்.

அவனை எழுப்ப வந்த ஸ்வேதா, இங்க பாரு ஆல்ரெடி லேட்டாச்சு. உன் ரொமான்ஸெல்லாம் மூட்ட கட்டிவைச்சுட்டு எழுந்திரு டீ போட்டுட்டேன். சொல்லிக்கொண்டே கட்டிலின் பின்பக்கம் அமைதியாக போய் நின்றுகொண்டாள்.

அமைதி நிலவவே போர்வை விலக்கி கண் திறக்காமல், கைகளால் அவளைத் தேடினான் கெளதம், பின்னாலிருந்து வெதுவெதுப்பான சூடோடு தோசைக்கரண்டியை வாய்மேல் வைத்தாள், அவன் அன்பு மனைவி.

ஆஆஆ...அய்யோ..அம்மா...ராட்சஷி. திடுக்கிட்டு கத்தினான்.

எதிர்பாராத அதிர்ச்சியினால் அவளை முறைத்துக் கொண்டே உதட்டைத் தேய்த்துக்கொண்டான் கெளதம்.

அவள் முகத்தில் கொப்பளித்த குறும்பு அந்திவானத்தின் திட்டுதிட்டான சிவப்பாக அவளை இன்னும் அழகாக காட்டியது.

போ..போய் குளி மொதல்ல..பாத்ரூமுக்குள் அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு சமையலறையில் வேலையைக் கவனிக்கச் சென்றாள்.
அவன் குளித்துவிட்டு வரவும் ஸ்வேதா டிபன் எடுத்துவைக்கவும் சரியாகயிருந்தது.ஒருவரையொருவர் கேலி செய்துகொண்டே சாப்பிட்டுமுடித்தனர்.

அவள் ஆபிஸீலில் இறக்கிவிட்டுவிட்டு,3 o க்ளாக் மறந்துறாத,தங்கம். ரெடியாயிரு..நான் வந்து பிக் பண்ணிக்கறேன். என்றான் கெளதம்.
ஷ்யூர் கெளதம், அங்க பாரு..ஸ்வேதா கைகாட்டிய திசையில் திரும்பினான்.

அவன் திரும்பிய நொடியில், ஷாம்புவின் தயவால்,ஷைனிங்காகவும் ஸ்டைலாகவும் காற்றிலாடிய அவன் முடியை சட்டென கலைத்துவிட்டு சிரித்தாள்.

ஓ! காட் , நான் ஆஃபீஸ் போகனும் என்ன ஸ்வே இது??
அடம்பிடித்துக் கைக்கொண்ட மிட்டாயுடன் வெற்றிச் சிரிப்பை உதிர்க்கும் குழந்தையாய் அவள் சிரித்து டாடா சொல்லிவிட்டு சென்றாள்.அந்த மென்சிரிப்பு அவனையும் தொற்றிக்கொள்ள மெல்ல புன்னகைத்துவிட்டு கார் கண்ணாடியில் முடியை சரி செய்துகொண்டான்.

மனசுக்குள் ,ஐ லவ் யூ ஸ்வேதா, என் நாட்களை அழகாக மாற்றியவள் நீ, தாங்க்யூ” என்றுசொல்லிக் கொண்டான்.

பிரம்மாண்டமான அந்த ஷாப்பிங் மாலிலிருக்க தனக்கு சகல உரிமையும் உள்ளது என்று பறைசாற்றுவதுபோல மின்னிக்கொண்டிருந்த நகைக்கடையில் எதிர்வரும் கல்யாண நாளுக்காக நெக்லஸ் செலக்ட் செய்துகொண்டிருந்தனர், கெளதமும் ஸ்வேதாவும்.

எத்தனையோ டிசைன் பார்த்தும் பிடிக்காமல் யோசித்துக் கொண்டிருந்தபோது, கெளதம் கடையிலிருந்தவரிடம் காதோடு ஏதோ பேசுவதைக் கவனித்தாள்.
சற்று நேரத்திற்கெல்லாம் , தோகைவிரித்த மயிலொன்று நீளமும்,பச்சையுமான கற்களுடனும் தங்கநிற உடலோடும் நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்து அவள் கையில் தவழ்ந்து கொண்டிருந்தது.எப்போதோ இவனிடம் ரசித்துச் சொன்னதை மனதில் வைத்திருந்து ஆர்டர் செய்திருக்கிறான்.

மனசுக்குள்ளேயே, என் ரசனைகளை உயிர்ப்பிப்பவனடா நீ என்று பாராட்டிவிட்டு அவனை இறுக்கித்தழுவிக்கொண்டாள். சந்தோசம் மிளிர மிக திருப்தியாய் அதை திருப்பிப் பார்த்து பில் போட சொன்னாள்.
அவள் மனநிலையை புரிந்தவனாய், அவளைப்பார்த்து கண்சிமிட்டினான்,கெளதம். GS என்று பொறிக்கப்பட்ட ப்ரெஸ்லெட் ஒன்றும் அவனுக்கான கிஃப்ட்டாக பில்லில் சேர்ந்துகொண்டது.

60 கிலோ எடையுடன் அழகுத்திமிரில் தன் சந்தோசம் உருக்கொண்டு தன்னோடு வாழ்ந்துகொண்டிருப்பதை நினைத்து பெருமிதப்பட்டுக் கொண்டான் கெளதம்.

ஒருவரையொருவர் காதல் பார்வையில் நனைத்துக்கொண்டு மெளனக்குடைப் பிடித்தபடி கைகோர்த்து சென்றனர்.

தீடீரென ஒரு கை கெளதமின் முதுகைத் தட்ட, அதிர்ந்து திரும்பினர் அந்த தம்பதிகள்.”ஹேய், எப்படிடா இருக்க”,அணைத்துக்கொண்டான்,கெளதமின் கல்லூரித் தோழன் – ராம்.

கல்யாணத்தில் அவனைப் பார்க்காததால் கொஞ்சம் குழப்பம் கலந்து சிரித்தாள் ஸ்வேதா.பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பின், தன்னோடு இன்னும் சில கல்லூரி நண்பர்கள் வந்திருப்பதைச் சொன்ன ராம்.

“நீங்க ரெண்டுபேரும் ஷாப்பிங் முடிச்சுட்டு ஃபுட் கோர்ட் வாங்க,எல்லாரும் அங்க வெயிட் பண்றோம்” கெளதமின் கைப்பிடித்து குலுக்கி விடைபெற்றுச் சென்றான்.கல்யாணத்திற்குப் பின் இருவரும் அவர்கள் கல்லூரி நட்புகளோடு அவ்வளவு நெருக்கமில்லை.எப்போதாவது ஏதேனும் வலைத்தளத்தில் பார்த்து ஹாய், ஹவ் ஆர் யூ.என்பதோடு சரி.ஸ்வேதாவிற்கு உற்சாகமாயிருந்தது,அவர்களோடு பேசி கெளதமின் கல்லூரி நாட்களைத் தெரிந்துகொள்ள.

கெளதம் சின்ன தடுமாற்றத்துடன் ஃபுட்கோர்ட் நோக்கி நடந்தான், ஸ்வேதா ஏதேதோ பேசியபடி வந்தாள்.3பெண்களும் 5 ஆண்களும் இருந்தனர், ஒவ்வொருத்தரையும் பேர் சொல்லி ராம் அறிமுகப்படுத்திவைத்தான், அதில் சிலரை கல்யாணத்தில் பார்த்திருப்பதாகச் சொன்னாள் ஸ்வேதா.

இது,பிரியா என ராம் சொல்லும்போது, கெளதமின் முகத்தில் எதோ இனம்புரியா உணர்வொன்றை கவனித்தாள் ஸ்வேதா. அந்தப்பெண்ணின் முகத்திலும் அதே உணர்ச்சி.கெளதமின் முகத்தில் பெரிதாக சந்தோசம் தெரியவில்லை, கொஞ்சநேரம் முன்பிருந்த காதல் முற்றிலுமாக தொலைந்திருந்தது, அவன் முகத்தில்.

நெகஸ்ட் வீக் மார்ச்-14த் எங்க வெட்டிங் அன்னிவர்சரி.எல்லாரும் கண்டிப்பா வரணும்.ஸ்வேதா அழைப்பு விடுத்தாள்,கெளதம் அதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.யெஸ், கண்டிப்பா வர்றோம்,எல்லாரும் கோரஸ் பாடினர். ஒரு பெண் மட்டும் வாயசைக்கவில்லை.வீடுதிரும்பும் போது அதிகம் பேசவில்லை.டிஸ்டர்ப் பண்ணவேண்டாமென விட்டுவிட்டாள் ஸ்வேதா.அவன் தோள்சாய்ந்தபடியே தூங்கிப்போனாள்.கெளதமிற்குத் தான் தூக்கம் பிடிபடவில்லை.

சில துளி கல்லூரி நினைவு, அவனை ஆழிப்பேரலையாய் விழுங்கிகொண்டிருந்தது.கலங்கியிருந்த கண்களை சிமிட்டி சரிசெய்த பின்,அவளை எழுப்பினான். ஸ்வே எழுந்திரு, வீடு வந்தாச்சு.அரைதூக்கத்தில் பெட்ரூம் சென்று உடைமாற்றி தூங்கிப்போனாள்.

கெளதம் பால்கனியில் நின்று தூறலினூடே தன் வாழ்வை புரட்டிப்போட்ட புயலை பார்த்துக்கொண்டிருந்தான்.
பிரியா—அவள் பற்றிய நினைவுகள் அவனை என்னவோ செய்தது. ஸ்வேதாவை நினைக்க கவலை மனதைக் கவ்விக்கொண்டது.அவளிடம் தன் கல்லூரி நாட்கள் பற்றி எதுவும் சொன்னதில்லை.பிரியாவும் அவளும் சந்தித்துப் பேசினால் என்னவாகுமோ என நினைத்தான். எப்படியேனும் இந்தமுறை சமாளித்துவிட்டால் இனிமேல் அவர்கள் பார்க்காமல் தவிர்த்துவிடலாம் என சமாதானப்படுத்திக்கொண்டு அந்த இரவை குழப்பத்தால் கடந்துபோனான்.

ஒரிரு வாரங்கள் கழித்து, மழையுடன் தொடங்கிய அந்த நாளில்,ஸ்வேதா லீவ் போட்டிருந்ததால், அவளுக்கும் ப்ரேக்ஃபாஸ்ட் செய்துவைத்து, தூங்கிக்கொண்டிருந்தவளுக்கு முத்தமொன்றை பரிசளித்து கிளம்பிச் சென்றான்.

மதியம் போல் யாரோ அழைப்புமணி அழுத்தவே, கதவைத் திறந்தவளுக்கு சின்ன இன்பதிர்ச்சி. பிரியாவும் இன்னொரு பெண்ணும் வந்திருந்தனர்.
வாங்க,வாங்க எதிர்பார்க்கவேயில்ல…உள்ள வாங்க..
சின்ன தயக்கத்துடன் உள்ளே நுழைந்தனர் இருவரும்.விஸ்தாரமான ஹாலின் எதிரெதிரே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.பிரியா அதிகம் பேசவில்லை.வீட்டைப் பார்த்தாள்.அங்கிருந்த சில ஃபோட்டோக்களை அழுத்தமாக பார்த்தாள்.

கூடவந்திருந்த பெண் தான் முதலில் கேட்டாள்,கெளதம் இல்லையா?
கொஞ்ச வேலையிருக்குனு ஆஃபீஸ் போயிருக்கான்.நீங்க வர்றதா சொல்லிருந்தா கண்டிப்பா வீட்ல இருந்திருப்பான்,ஜீஸ் டம்ளரை நீட்டியபடி சொன்னாள் .

அடுத்த மாசம் எனக்கு கல்யாணம், நீங்களும் கெளதமும் கண்டிப்பா வரனும்.சொல்லிக்கொண்டே பத்திரிக்கை கவரில் பெயரெழுதி நீட்டினாள் பிரியா.கிளம்பும்போது தயங்கி, ஒரு கவரை கொடுத்தாள். இது கெளதம் ஸ்லாம் புக்,காலேஜ் முடிச்சப்றம் அவன்கிட்ட குடுக்க முடியல.அவன் வந்ததும் குடுத்துடுங்க.

ஓ!ஷ்யூர்.சிரித்து வழியனுப்பிய பின்,உள்ளே வந்து பிரியாவையும் தன்னையும் ஒப்பிட்டு பார்த்தாள். என்னவிட கொஞ்சம் முடி அதிகம் ஆனா மாநிறம் தான்.தன்னைத்தானே சமாதானப்படுத்தி சிரித்தாள்.
இது என்ன அசட்டுத்தனம்,அவளோடு எதுக்கு இப்பிடியொரு ஒப்பீடு..ச்ச்சே..
ஜீஸ் டம்ளரை எடுக்க குனிந்தபோது அந்தக் கவர் கண்ணில் பட்டது.திறந்து பார்க்க, ஒரு டயரி இருந்தது.

திறக்கலாமா வேணாமா இருயோசனை தலைப்பட, சரி படிச்சுதான் பார்ப்போமே. என்று திறந்துபார்த்தாள். மேலோட்டமாக படிக்க கெளதமை பற்றிய நண்பர்களின் பார்வையும் சின்னசின்ன கலாட்டாவும் நிறைந்திருந்தது.ஒருசில பக்கங்கள் மட்டும் பின் அடிக்கப்பட்டு.”சீக்ரெட்” என்று சிவப்பு மையில் மின்னியது.

அதீத ஆர்வத்தில்,பின்னைக் கழட்டிவிட்டு படிக்கத் தொடங்கினாள் ஸ்வேதா.

“காற்றலையிலொரு பாடல் காதோரம் உரசிச்செல்ல,
நினைவலையின் தேடலில் நீ உரசிச்செல்கிறாய் மெல்ல”

என்று ஆரம்பித்த கவிதையின் முடிவில், கெளதம்,நாம் சேர்ந்திருந்த ஃபோட்டோ,பரிமாறிக்கொண்ட லெட்டர்ஸ் எல்லாத்தையும் எரிச்சுட்டேன். இதில என்னத்தவிர மத்த ஃபிரண்ட்ஸீம் உன்னப் பத்தி  எழுதியிருக்காங்க, அதனால கிழிக்கவோ அழிக்கவோ மனசு வரல.மறுபடியும் என் வாழ்க்கையில நான் உன்ன சந்திக்கவே கூடாது.

இப்படிக்கு,
பிரியா…

படித்ததும்,காலுக்கு கீழே பூமி நழுவினாற்போல் இருந்தது ஸ்வேதாவுக்கு. கெளதமும் பிரியாவும் காலேஜ் நாட்களில் காதலித்ததும்,ஒருவரையொருவர் மிஸ் பண்ணியதையும், அதன்பின் குடும்ப சூழல் காரணமாக அவள் அவனைவிட்டு விலகியதும், தங்கள் கல்யாண நிச்சயத்திற்குப் பின்னும் இருவரும் பேசியதையும் அத்தனை அழகாக கவிதையாக எழுதியிருந்தாள்.
அவளின் வார்த்தைகளில் தொனித்த வலி, இன்று அவள் கண்களிலும் இருந்ததை நினைத்துப்பார்த்தாள்,ஸ்வேதா.

தன்மீது இத்தனை அன்பை பொழிபவனுக்குள் இப்படியொரு வலியும் இருந்திருக்கும் என்பதை தான் ஒரு உணரவில்லையென வருத்தம் மேலிட்டது.அதைக்காட்டிக்கொள்ளாமல் தன்னோடு வாழ்பவனை நினைத்து பெருமையாகவும் இருந்தது.

உருவமறியா காரிருளொன்றுநெஞ்சையழுத்தி தொண்டையடைத்து விழிநீர் வழிய இன்னதென்று இனம்காண முடியாமல் அவளை தவிக்கச்செய்தது. மனம் கலங்கிய குட்டையாக இருக்க, பேசாமல் போய் படுத்துவிட்டாள்.

விசிலடித்தபடி வீட்டுக்குள் வந்த கெளதம், டேபிள்மேல் கிடந்த டைரியினால் அதிர்ச்சியடைந்தான். பின்னடிக்கப்பட்ட பக்கங்கள் திறந்திருந்ததும்,ஸ்வேதா பெட்ரூமில் இருந்ததும் அவனுக்கு நடந்தது அனைத்தையும் விளங்கச் செய்தது.அவளை எப்படி எதிர்கொள்வதென யோசித்து ஹாலிலேயே உறங்கிப்போனான்.இரண்டுநாட்களாக அவளிடம் சரியாக பேசவில்லை,அவளும் எதுவும் கேட்கவில்லை அசாதாரணமாக இருந்த நிசப்தம் அவன் அமைதியை இழந்து பேரிரைச்சலாய் கூச்சலிட்டது.

ஒருமுறை பஸ்ஸில் குழந்தையொன்றை மடியில் வைத்து கொஞ்ச அவள் கோபப்பட்டு இதேபோல் முகத்தை தூக்கிவைத்துக் கொண்டு சண்டைபோட்டது ஞாபகம் வந்தது.அதை நினைக்கும்போதே பகீரென்றிருந்தது.இன்று எப்படியாவது பேசி மன்னிப்பு கேட்டுவிடலாம்,பிறகு அவள் என்ன முடிவெடுத்தாலும் எடுக்கட்டும்.

ஸ்வேதா… மென்மையாக அழைத்தான்..

டிபன் டைனிங்டேபிள்ல இருக்கு.. குரல் மட்டும் வந்தது.

இங்கபாரு ஒரு நிமிசம்..அவன் குரல் உடைய ஆயத்தமாயிருந்தது.

மெதுவாக அவள் முகம் திருப்ப,லேசான காய்ச்சலை உணர்ந்தான். டேப்ளட் எடுத்துக்கிட்டியா இல்லயா..

பதில்வரவில்லை.

டேப்ளட் எடுக்க டேபிளைத் திறக்க,நாட்காட்டியில் தேதி 6 என்று காட்டியது.அடக்கடவுளே, அவளுக்கு பிரியட்ஸ் டைம், எப்படி மறந்தேன்..
சாப்பிட்டியா ஸ்வே,இந்த டயத்துல டேப்ளட் வெறும் வயித்துல வேணாம்.

நான் சாப்பிட்டேன்,டேப்ளட்டும் போட்டாச்சு…இப்போதும் திரும்பாமல் பதில் சொல்லிவிட்டு, போர்வையை தலையோடு போர்த்திக் கொண்டாள்.
பேச வார்த்தைதேடி தோற்று மெளனத்தின் சாட்சியாய் துளி கண்ணீரை சிந்திவிட்டு நகர்ந்தான்.சஞ்சலமான மனதின் வலி, விழியோரம் நீர்த்திவலைகளாய் சஞ்சரித்தது.

எவ்வளவு நேரம் போனதென்றே தெரியவில்லை.பால்கனியில் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். பார்வை எங்கோ நிலைத்திருக்க, சுமக்கமுடியாத பாரத்தை இறக்கிவைக்க வழிதேடி மனம் இலக்கில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தது.குளிர் காற்று நாசியூடுருவ தன்னிலை உணர்ந்தான்.
கைக்கடிகாரம்,மணி 3என்று காட்டியது. பெட்ரூமுக்குள் போய் அவள் தூங்குவதைப் பார்த்தான். நெற்றியில் கைவைத்து காய்ச்சல் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, கொஞ்சம் தைலம் எடுத்து அவள் கெண்டைக்காலிலும் பாதத்திலும் தேய்த்துவிட்டான்.

அவள் அசதியுணர்ந்து, பாதம் தேய்த்த அவன் கைகளின்  வெதுவெதுப்பில் சிலிர்த்தது,அவர்களுக்கான காதல்.துக்கத்தையாவது தொண்டைக்குழியோடு அடைத்துக் கொள்ளலாம், கண்ணீரை தன்னோடு தக்கவைத்துக்கொள்ள கண்களுக்கு அத்தனை சாமர்த்தியம் இருப்பதில்லை.ஸ்வேதா கண்ணீரை போர்வையோடு சேர்த்து மறைத்தாள்.

 ரூமை விட்டு வெளியேற எத்தனித்தவன் மீண்டும் உள்ளே வந்து,அவள் பாதங்களை ரெண்டு கைகளாலும் பற்றி,

என்னை மன்னிச்சுரு ஸ்வே, கல்யாணத்துக்கு முன்னாடி பிரியாவ லவ் பண்ணது உண்மைதான். ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் உன்னோட வாழ ஆரம்பிச்சப்றம் தான் ,லவ்னா என்னனு புரிஞ்சுக்கிட்டேன்.உன்னத்தவிர வேறெந்த நெனைவும் எம்மனசுல இல்லம்மா,நீ என்ன முழுசா ஆக்கிரமிச்சிட்ட ஸ்வே. சத்தியமா நீ கொடுத்த சந்தோசத்தையும் நிம்மதியையும் வாழ்க்கையில வேறயாரும் எனக்கு தரமுடியாது. உன்ன மாதிரி ஒரு சந்தோசத்த குடுக்கத்தான் அதுக்கு முன்னாடி கடவுள் அப்படியொரு கஷ்டத்தை குடுத்தார்னு நெனைச்சேன்.இத சொன்னா நீ கோபப்பட்டு என்னவிட்டு போய்டுவியோனு நெனைச்சுதான் உங்கிட்ட சொல்லல.என்ன மன்னிச்சுரு தங்கம். நீ யாரயாவது லவ் பண்ணியிருந்தேனு சொன்னா நிச்சயமா என்னால தாங்கிக்க முடியாது. உன்னோட முழுக்காதலும் எனக்கு மட்டுந்தான் நெனைப்பேன், அதே வலி உனக்கும் இருக்கும்னு எனக்கு புரியுதுடா..

இப்படியே கோபப்பட்டு நம்ம வாழ்க்கையை நாம கெடுத்துக்க வேணாம் தங்கம்,ப்ளீஸ்…கதறினான்.

அதற்குமேல் தூங்குவதாய் நடிக்க அவளாலும் முடியவில்லை.

கெளதம்…கட்டிலைவிட்டு எழுந்து அவனை கட்டிக்கொண்டு தேம்பினாள்.
தன் பழையகாதலை எப்படி சொல்வதென தெரியாமல் தான் குழம்பியதை இவன் கோபமாக நினைத்துக்கொண்டானே.தான் மட்டும் மறைத்து வைப்பதா என்ற குற்றவுணர்வில் சிக்கித்தவித்ததை இவனை தவிர்ப்பதாக நினைத்துவிட்டான்.இப்படி அன்பை பொழிபவனிடம் அதை சொல்லி இன்னும் கஷ்டப்படுத்தவேண்டாம்.எப்படி வாழ்கிறோம் என்பதில்லல்லவா இருக்கிறது உண்மைக்காதல்.



விழியோடு துளிர்த்து நின்ற இருதுளி நீரோடு, கானல் நீராய் போன தன் பழைய காதலையும் சுட்டுவிரலால் தட்டிவிட்டு சொன்னாள், ஐ லவ் யூ கெளதம்.

“உன்கழுத்தில் மாலையிட 
உன்னிரண்டு தோளைத்தொட 
என்னதவம் நானும் செஞ்சேன் மாமா”

ஸ்வேதாவின் அலாரம் பாட்டாக பாடியது.




Friday, February 14, 2014

காதலர் தினம்

வறண்ட பாலைவனத்தில்,

கானல் நீர் தேடி  பயணித்திருந்தேன்.

வழிப்போக்கனாக அறிமுகம் ஆனாய்;

உன் அறிமுகம் என் முதல் வரம்.

தரிசான என் வாழ்க்கையை,பரிசாக மாற்றினாய்,

வழித்துணையாக என் பயணத்தில் இணைந்தாய்,

வாழ்க்கை இதுவென புரிய வைத்தாய்.

என்னுள் ஒளிந்திருந்த என் ரசனைகளை வெளிக்கொணர்ந்தாய்;

என்னை நானே ரசிக்க வைத்தாய்.

கானல் நீர் தேடலில்

காலம் கரைவதை கண்ணியமாய் உணர்த்தினாய்.

கையில் கிடைத்த பொக்கிஷத்தை,

கடலில் வீசி  காயப்படுத்தினேன்;

கலங்காமல் நின்றாய்.

உடைத்து நொறுக்கினேன் உன் இதயத்தை;

வார்த்தைகளால் உன்னை ரணப்படுத்திவிட்டு,

வலிக்கிறதா என்றேன்;

இல்லை காதல் இருக்கிறது என்றாய்.

கண்கள் பனித்து விட்டேன்!

நீ என் வாழ்வில் வந்த காரணம் புரிந்து கொண்டேன்.

ஒரு இலையுதிர் காலத்தின் இளவெயில் நேரத்தில்;

மெல்லிய சாரலுடன்,

மெய் மறக்கும் இசையில்,

வாழ்க்கைத்துணையாய் மாறியிருந்தாய்!


ஆம்! வழிப்போக்கனாக வந்து,

வழித்துணையாய் இணைந்து,

வாழ்க்கைத் துணையாய் நிலைத்து நின்றாய்!


எந்தவொரு கொண்டாட்டங்களிலும்

பெரிதாய் ஈடுபாடு இருந்ததில்லை எனக்கு;

உன்னை எனக்கு கொடுத்த உறவு காதல் ஆகி போனதால்,

சந்தோசத்துடன் நானும் கொண்டாடுகிறேன், காதலர் தினத்தை.

என்றென்றும் காதலுடன்

திவி