Thursday, June 11, 2020

மகிழதிகாரம்

இன்றோடு எங்கள்  வீட்டு ஆனந்த யாழுக்கு அகவை ஒன்று. என் காலத்தின் கால்களில் அவள்  கட்டிவிட்ட சக்கரம் தான் எத்தனை வேகமாக சுற்றிக் கொண்டிருக்கிறது.

சிசேரியன் பதட்டத்தில் அரை நினைவில், "அவங்க அப்பா மாதிரியே அழகான பெண் குழந்தைமா, பார்க்கறீங்களா" என டாக்டர்  கேட்டதும்; கணவரின் பெண் சாயல் கற்பனைக்கெட்டாமல்; அழகாவும் அவரைப்போலவுமா என்ன முரண் 😏 என்றெண்ணியபடியே "கண்டிப்பா டாக்டர் பாக்கனும்" என்றதும், அதைத்தொடர்ந்து,
அன்றலர்ந்த ஆம்பல் மலரொன்று  மெல்ல தலை நீட்டியதைப் போல இவ்வுலகில் ஜனித்த கணத்தில் அவள் பொன் முகம் கண்டதும்; இப்போதுதான் நடந்தது போலிருக்கிறது. நாட்காட்டியில் நகரும் நாள்கள் வருடம் ஒன்றென சிரிக்கின்றன.

திக்கி திக்கி  பேசும் அவளின் ஓரிரு மழலைச் சொற்களில் "தேமதுரத் தமிழோசை" தன் சுவை கூட்டிக்கொள்கிறது.

தட்டுத்தடுமாறி எழுந்து நின்று அவள் பிஞ்சுக் கையிரண்டையும் நீட்டி அழைக்கையில், என் மெய் கரைந்து அப்படியே அந்தக் குட்டி கைகளுக்குள் அடைக்கலமாகின்றது.

நாளொரு அழகும் பொழுதொரு குறும்புமென வளர்ந்து வருகிறாள் எங்கள் வீட்டு வண்ணத்துப்பூச்சி.  மனையெங்கும் மகிழ்ச்சியின் மென் தடம் பதிக்கின்றன அவள் சிறகுகள்.

இன்னும்  எத்தனை வளர்ந்தாலும்
எவ்வளவு சேட்டை செய்தாலும், ஆழ்ந்த உறக்கத்தில்  இதழோரத்தில்  சிந்தும் அவளின் ஒற்றை குறுஞ்சிரிப்பு போதும் இன்னுமின்னும் அவளை அள்ளிக் கொஞ்ச.

அவள் இருக்கும் சூழலும் அவளைச் சூழ்ந்திருப்பவர்களும் என்றும்  அவளால் மகிழ்வுற்றிருக்க வேண்டும் என்றே அவளுக்கு "மகிழ்" என பெயர் சூட்டினோம்.

யாரொருவர் அவளை அழைக்கும் போதிலும் அவளின் பெயரே, அவளுக்கு  வழங்கும் ஆசியாகட்டும்.

நிறைமதி பெரும்புகழுடன் நீடுழி வாழ்க மகளே!

(பிள்ளையார் சுழியுடன் இனிதே தொடங்குகிறது மகிழதிகாரம். 😊)

#மகிழதிகாரம் #MAKIZHdays