Friday, May 30, 2014

அப்ரைசல் (ஆப்பு+ரைசல்)


கார்ப்பரேட் வாழ் மக்களுக்கெல்லாம் மிகப்பரிட்சயமான வார்த்தையிது. இந்த தலைப்பை பார்த்ததுமே சரியா "ஆப்பு+ரைசல்'னு படிச்சா,
"என் இனமய்யா  நீங்கள்".

கேள்விப்படாதவங்களுக்கு சின்ன அறிமுகம்:
அது ஒண்ணுமில்லைங்கோ, நம்மூர்ல பொங்கல், தீவாளினா சம்பளத்த 
கொஞ்சம் ஏத்தித் தருவாங்கல்லோ,அதேபோல வருசத்துக்கொருக்கா இந்த கார்ப்பரேட் கம்பெனியில கொடுக்கறதுக்கு,சிலபல நடைமுறையிருக்கு 
அதுக்கு பேர் தான் அப்புரைசலு :-/ 

பண்ணையில வளர்த்த கோழி, நேரா பார்பிக்கியூ கிரில்லுல போயி 
சிக்குனாப்படி, காலேஜ் கேம்பஸ்ல செலக்ட்டாகி, ஐடி கம்பெனியில வேலை
கெடச்சு அல்லோகலப்படற ஒரு அறியாமண்ணோட,(மைண்ட் வாய்செல்லாம் 
மியூட்ல வைங்கப்பா) அவலக்குரல் இது.

மொதோ வருசம் இன்க்ரிமென்ட்டுனு சொன்னதுமே, "நான் ரொம்போ 
ஹேப்பி, அண்ணாச்சி".நாமதான் காலேஜ்லருந்து அப்படியே இங்க வந்துட்டோமே
அதுனால,க்ளாஸ்ல இருக்கற மாதிரி பயங்கர சின்சியர்.
மேனேஜர் வந்ததும் எந்திரிச்சு குட்மார்னிங் சொல்றதுலருந்து, கேண்டின் பக்கம்கூட போகாம, சீட்டிலயே சாப்பிட்டு, அடுத்த ஷிஃப்டுக்கும் சேர்த்து வேலைசெஞ்சு, அட,மீட்டிங்குல கூட, தூங்காம,மொபைல நோண்டாம (அட, ஆமாங்க! அப்ப நான் வைச்சிருந்தது, நோக்கியா-1100 தான்!!!!! #படையப்பா-சிவாஜி வாய்ஸ்ல படிச்சிடுங்க..ஹிஹி) கையத்தூக்கி பதில் சொல்றளவு அப்படியொரு அர்ப்பணிப்பு.(என்ன்ன்ன, பொய் சொன்ன வாய்க்கு பொராட்டா கெடைக்காதா) 

ஒரு நாள்  டேமேஜர்கிட்டயிருந்து ஒரு ஓலை,"இந்தாம்மா, இந்த வருசத்துல எத்தினி 
ஆணியை எப்படியெப்படியெல்லாம் கழட்டுனன்னு வெலாவரியா ஒரு பிரசன்டேஷன்ல போட்டு,  இத்தனாம் தேதிக்குள்ளாற  சப்மிட் பண்ணிடுனு”. 

உடனே என்னோட மனக்கோட்டையில, விக்ரமன் பட பாட்டுல முன்னேறும் ஹீரோ போல, "லாலா-லாலா--லாலாலா---லாலா"பேக்ரவுண்ட் மியூசிக்கோட, கனவெல்லாம் நனவாகுறா மாதிரி, ஒரு இல்லயில்ல பல கற்பனை.கஷ்டப்பட்டு அந்த பிரசன்டேசன முடிச்சனுப்பிட்டு, அம்மா சைகைக்குக் காத்திருந்த தலைவா ரிலிஸ் மாதிரி, டேமேஜர் பதிலுக்குக் காத்திருந்தேன். கூகுள் சர்ச் பட்டன் கதறக்கதற, என்னவெல்லாம் கேட்டா, எப்படி பதில் சொல்லனும், எப்படி ப்ரசண்ட் பண்ணனும்னு அர்ஜூன்-ரகுவரன், முதல்வன் இன்டர்வியூ ரேஞ்சுக்கு, ப்ரிப்பேர் பண்ணிட்டுப்போனா, அது கடைசியில் அர்னாப்-ராகுல் இன்டர்வியூ மாதிரி நடந்துருச்சு. :(  சூ சேட்… யூ நோ.

 முதல்வருச அப்ரைசல்:

டேமேஜர் -  5 ஸ்டார்க்கு, உங்கள நீங்களே ரேட் பண்ணினா எத்தன ஸ்டார் குடுப்பீங்க?
மீ (தி இன்னோசென்ட்)- (குரலில் தன்னம்பிக்கை, தாறுமாறா தடம்புரண்டோட,சீட்டின் நுனியில் வந்து) 4.5 சார்.
டேமேஜர்- சோ,உங்களுக்கு எல்லாம் தெரியும்னு நீங்க நினைக்கறீங்க. மொதல இந்த ஆட்டியூட மாத்தனும்.
மீ (தி இன்னோசென்ட்) ங்கே என்ன? ஆட்டுக்குட்டி வாங்கணுமா (மனசுக்குள்ளாறதான்)
டேமேஜர் -  உங்க பெர்மான்ஸ் நல்லாதான் இருக்கு..ஆனா,
(இந்த வார்த்தைகள் காதுக்குள்ளாற பாய்ஞ்சதும்,சொங்கிப் போயிருந்த நான், காளிமார்க் சோடா குடிச்சமாதிரி தெம்பா நிமிந்தேன்)
டேமேஜர் – உங்களோட டொமைன் (“X”) மட்டும் கான்சண்ட்ரேட் பண்றீங்க, நீங்க ஏன் அந்த “Y” ப்ராக்ஜெட்ல இன்வால்வ் ஆகக்கூடாது?
மீ – சார், நான் வொர்க் பண்ற லைன் வேற, அந்த ப்ராக்ஜெக்ட் வேற.,,,
டேமேஜர்— (அனாயசமாக இல்லாத தலைமுடியை கோதிக்கொண்டு) சோ வாட்? கத்துக்கனும், நெறையா கத்துக்கனும் அதான் நமக்கு சொத்து.

என்னோட ஐக்யூ லெவல் சராசரிக்கு அதிகமாயில்லாததால், அவர்,
”இன்க்ரீமெண்ட்டா? பிம்பிளிக்கா பிலாபி”யென மறைமுகமாய் சொன்னது மரமண்டையில் உரைக்காது  போயிற்று. நான் கூகுளை கதறடித்தது போல், அவர் விக்கிபீடியாவை கதறடித்து, நெறையா ப்ரிப்பேர் பண்ணியிருப்பர் போல, சோடா குடிக்காம, பேசிக்கிட்டேயிருந்தார் மனுசன். என் நிலைமையோ, ஆட்டோ ட்ரைவரிடம் சிக்கிய அரவிந்த கெஜ்ரிவாலானது.சம்பிரதாய விழாவில், தேசிய கீதத்தை எதிர்பார்க்கும் பள்ளிக் குழந்தையாய், மீட்டிங்கின் ஆயுளை அளவிட்டுக் கொண்டிருந்தேன்.

ஒருவழியா முடிச்சுட்டு, நான் என்ன சொல்றேனு,உங்களுக்கு புரிஞ்சுதுல்ல.உங்க டார்கெட்லாம் க்ளியரா இருக்குலனு, ரெண்டு லோடு வேலையக் அதிகமாக் குடுத்துட்டு, குட். அடுத்த வருசம் உங்களுக்கு நல்ல ஹைக் நிச்சயமா இருக்கும்” கோட் கோபியாய் உறுதியளித்தார். ”பை தி வே, ட்ரெயினிலருந்து உங்களுக்கு பெர்மனண்ட் எம்ப்ளாயியா ப்ரோமோசன் கெடைச்சுருக்கு. இட்ஸ் கிரேட்”, என்றபடி கை குலுக்கிவிட்டு போயிட்டார். ஆனா, அந்தப் பதவியையும், சம்பள ஸ்லிப்ல வாங்குறதுக்குள்ள, HR டிபார்ட்மெண்ட்டுக்கும் டேமேஜர் கேபினட்டுக்கும் அஜித்த விட அதிகமா நடக்கவிட்டுட்டாய்ங்க, பாவி மக்கா. L.

சரி, இந்த வருசம் இல்லாட்டி, அடுத்த வருசம்னு மனச தேத்திகிட்டு, மறுபடியும் சின்சியாரிட்டி சிங்கமாக, உழைக்கத் தொடங்கினேன்.”எலக்சன் ரிசல்ட் வரும் முன்னே, ஊழல் வழக்கு வரும் பின்னே”ங்கறாப்படி, அடுத்த வருசத்து அப்ரைசல் மீட்டிங்கும் வந்துச்சு. மார்ச் மாசமும் வந்துச்சு. என்னோட கற்பனைக் குதிரை, 4G ஸ்பீடுல, தறிகெட்டு செவ்வாய் கிரகம் வரை ஓட ஆரம்பிச்சது, முந்தின வருசத்தை ரீவைண்ட் பண்ணிப் பார்த்ததும், தொபுக்கடீர்னு குப்புற விழுந்துடுச்சு.

இப்ப, நான் அந்த X,Y,Z (நல்லவேளை இங்கிலிஷ் எழுத்து அதோட முடிஞ்சு போச்சு) இத்யாதி ப்ராஜெக்ட்ல இன்வால்வாகி, நல்லபடியா வேலை செஞ்சுட்டுருந்தேன். அதுக்கு அடையாளமா, நாலஞ்சு மெடலு, அவார்டுனு வாங்கிக் குவிச்சுருந்தேன். (அது, காசியப்பன் பாத்திர கடையில ரிஜெக்ட்டானது, தனி சோகம்).இந்தவாட்டி, எப்படியும் நல்ல இன்க்ரிமெண்ட் வாங்குறோம், ”ஆத்தா எனக்கு இன்க்ரிமெண்ட் கெடைச்சுருச்சு”னு கத்தறோம்னு முடிவு பண்ணிகிட்டேன்.

இரண்டாம் வருச அப்ரைசல்:

டேமேஜர் -  5 ஸ்டார்க்கு, உங்கள நீங்களே ரேட் பண்ணினா, எத்தன ஸ்டார் குடுப்பீங்க?
மீ   (இந்த கேள்விக்கு, போனவாட்டி மாதிரி பல்ப் வாங்கக் கூடாதுனு, மீராகுமார் மாதிரி, சிரிச்ச முகமா,) 3 சார்.
டேமேஜர் –ஏன் ஏன் ஏன்?? (மனசுல ரகுவரன்னு நெனப்பு :-/) உங்கள் நீங்களே குறைச்சு மதிப்பிடக் கூடாது.
மீ – (மன்மோகன் மாதிரி வாயடைச்சுப் போயி பாத்துட்டு இருந்தேன்).
டேமேஜர்— நீங்க லீவு நாள்ல போன் பண்ணினா, எடுக்கறதே இல்லையாமே.
மீ- சார், அதுவந்து, லீவுனாலே…
டேமேஜர் –வெயிட் அண்ட் லிசன், உங்களோட பொறுப்புகள் கூடியிருக்கு, அதுக்கேத்த மாதிரி நீங்க வேலை செய்யனும், ஒகே?
மீ – ஒகே, சார்.

மறுபடியும் வாழ்க்கையின் 1.30 மணி நேரத்தை கருணைக் கொலை செஞ்சுட்டு, அவரு பேசறத கவனிச்சுட்டுருந்தேன். இடையில வேற, “நானெல்லாம் அந்தக் காலத்துலனு”. அவரோட சுய சரித்திரத்தை ஆரம்பிப்பாரு,பாருங்க ஷப்பாஆஆஆ, கடவுள் ஏண்டா காதைக்கொடுத்தாருனு ஃபீல் பண்ண ஆரம்பிச்சுடனும்.அச்சுப்பிசகாமல் போனவருசம் பேசுன, அதே வழவழா கொலகொலா வசனங்கள்.

இந்த வருசம் இன்க்ரிமெண்ட் வந்துச்சு, ஆனா, நான் நெனைச்சதுக்கும் வந்த பர்சண்டேஜ்க்கும், மிடில் க்ளாஸ் பட்ஜெட்ல விழுகுற மாதிரி துண்டு, இல்லயில்ல பெரிய ஜமுக்காளமே விழுந்துருந்தது.நேரா டேமேஜர்கிட்டப் போயி, என்ன சார், இப்படியாகிடுச்சுனு கேட்டா, “ஆனா பாருங்க, எங்களால முகேச காப்பத்த முடியலன்னு” சொல்ற டாக்டர் மாதிரி கையை விரிச்சுட்டார்.ரெண்டு, மூணு நாள் கடுங்கோபத்துல ரெண்டு வேளை ஸ்னாக்ஸ கட் பண்ணிட்டு சோகமா சுத்துனேன்.அப்புறம் தம்பி ராமையா போல, அதுவே பழகிடுச்சு.

இந்த வருசமாச்சும், காம்ப்ளான் உதவியில்லாம, நல்ல சம்பளத்த எட்டிப் பிடிக்கனும்னு தீவிரமா உழைச்சேன். அப்பப்ப, கையில ஃப்ளூட்டோடா, ஸ்ரீகிருஷ்ணர், கனவுல வந்து, ”கடமையைச் செய், பலனை எதிர்பாரதே”னு அறிவுரை சொல்லிட்டுருந்தார். அதனால கண்ணுங்கருத்துமா படம் பாக்கறத குறைச்சுட்டு, ட்விட்டர், ஃபேஸ்புக் மட்டும் அப்பப்ப யூஸ் பண்ண ஆரம்பிச்சேன். வேலைக்கு நடுவுலதான். நம்புங்க மக்களே, “நம்பிக்கை, அதானே எல்லாம்”.J அடுத்த மார்ச் மாசம் வந்தது, காதுக்குள்ளாற கானாபாலா, “காசு, பணம், துட்டு, மணி, மணி”னு கத்திக்கிட்டுருந்தார்.

மூணாவது வருச, அப்ரைசல் மீட்டிங்:

டேமேஜர் – வேலை செய்யறது முக்கியமில்லமா, வேலை வாங்கக் கத்துக்கணும்.
மீ—ஒகே சார்.(இவரு எப்பப்பாரு , மருமகளை குத்தஞ்சொல்ற மாமியாராட்டம் எதாவது சொல்லிகிட்டே இருப்பாருனுதான் தெரியுமே)
டேமேஜர்- அந்த ப்ராஜெக்ட்ல இது என்னனு தெரியுமா? இந்தப் ப்ராஜெக்ட்ல அது என்னனு தெரியுமா? ஏன் அதப் பண்ணல, இதப் பண்ணல. பில்கேட்ஸ் எப்படி முன்னுக்கு வந்தார் தெரியுமா, இன்போசிஸ் நாரயணசாமி பத்தித் தெரியுமா?
(அனுஷ்காவும், காஜலும் மாறிமாறி, உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கானு கேட்டு ஏத்திவிட்டதால, எக்கச்சக்கமா சாப்பிட்ட உப்பு வேலை செஞ்சு,சார், எனக்கு 16 புள்ளி கோலம் பக்காவா போடத்தெரியும்.. உங்களுக்கு தெரியுமானு? அடிவயித்துலயிருந்து பொங்கிவந்த ஆத்திரத்துக்கு, நாபிக்கமலத்துலயே ரெட் சிக்னல் போட்டு)
மீ--சார், என்னோட டார்கெட்லாம் முடிச்சுட்டேனே, க்ளியரா.
டேமேஜர் – வெயிட் அண்ட் லிசன், உங்ககிட்ட இன்னும் அதிகமா எதிர்பாக்குறோம். உங்க டார்கெட் லிஸ்ட்ல எதாவது சந்தேகமிருக்கா? இல்லையா. குட்.
மீ – ஒகே சார்.

மறுபடியும் டார்கெட்னு ஒரு லிஸ்ட்ட குடுத்துட்டார். இப்போ காதுக்குள்ளாற, அதர்வா தான் அடிக்கடி,“நியாமாரே, இது நியாமரே, கொஞ்சம் சேத்து போட்டுக் குடுங்க நியாமாரேஏஏஏஏ”னு வாய்ஸ் குடுத்தார். :(  காலம் செம கடுப்பாக, கழிந்துகொண்டிருந்த வேளையில், கொடுமை கொடுமைனு லத்திகா பாக்கப்போன தியேட்டர்ல, அதவிடக் கோரக்கொடுமையா வேலாயுதம்  ட்ரெய்லர் போட்ட கதையா,இங்கயிருந்து வேற கம்பெனிக்கு மாறுன பக்கிகள் எல்லாம் ”அட, இன்னுமா அதே கம்பெனியில இருக்கனு” கேட்டு காதுல ஆசிட்ட ஊத்துச்சுங்க..

கொஞ்சம் உற்றுநோக்கி, சீர்தூக்கி, பாத்ததுல, வெளியயிருந்து வந்து ஜாயின் பண்றவங்களுக்கு, கெடைக்கற சரியான அங்கீகாரம் கூட நமக்கு கெடைக்கலங்கற உண்மை, பொளேர்னு பொடனியில அறைஞ்சது.அப்பப்ப, எனக்கும் டேமேஜருக்கும் வாய்க்கால் சண்டையாகி, மூஞ்சத் தூக்கிவைச்சுட்டே சுத்துவேன். சில நேரத்துல செம கடுப்பாகி, ரிசைன் பண்ணிடலாம்னு நெனைக்கும் போது, நல்ல ஷைனிங்கான, அலுமினியத் திருவோடு ஒண்ணு, கண்ணு முன்னாடி ஃப்ளாஷாகி, நம்மள ஆஃப் பண்ணிடும்.அதுவும் ஜீன்ஸ்,டி சர்ட், ஃப்ரீ ஹேர், ஆண்ட்ராய்ட் ஃபோன் சகிதம் ஒரு பெக்கர நினைக்கவே கொடூரமா இருந்ததால, பொதுநலன் கருதி அந்த முடிவ அத்தோட கைவிட வேண்டியதாப்போச்சு.

வந்த இன்க்ரிமெண்ட்ட, பாத்ததும், தொண்டைக் கமற, குரலடைக்க, கண்ணுல, அழுகை முட்டிக்கிட்டு வரும். எதிர்த்துப் பேசத் தெரியாம, என்ன தப்புனே புரியாம, வேலையை விடமுடியாத இயலாமையும் சேர்ந்து, பாடாப்படுத்தும்.

டேமேஜர் அட்ராசிட்டிகளையும், ஆஃபாயில் ரூல்ஸ்களையும் பாத்து வெறுப்பாகி,
“கூடவே சுத்துறியே செவ்வாழை நீயாவது சொல்லக்கூடாதானு” டீம் லீடர்கிட்ட போய் சொன்னா,”நீங்க ஒண்ணு பண்ணுங்க, உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம், இந்தப் புது பையனுக்கு சொல்லிக் குடுத்துடுங்க”, அப்பறமா, உங்களுக்காக, நான் அவர்கிட்ட பேசறேன்” அப்படின்னு நமக்கு வைக்கிற ஆப்ப, நம்ம கையிலயே குடுத்து வைச்சுக்கச் சொல்லுவார்.

யோசிச்சுப் பாத்தா, இந்த நாலு வருசத்துல, பணத்தைத் தாண்டின பல விசயத்த கத்துக்கிட்டேன்.

1.சிரிச்சுகிட்டே நம்ம மேல திணிக்கிற வேலைகளை அதே சிரிப்போட எப்படி தவிர்க்கறது.
2.என்னதான் உறவு கொண்டாடினாலும், வேலைனு வரும்போது சக பணியாளரா மட்டுமே யோசிச்சு நடக்கறது.
3.நாம கஷ்டப்பட்டு கத்துக்கிட்ட விஷயங்கள, கேட்காம யாருக்கும் இலவச அறிவுரையா சொல்லக்கூடாது.
4.நாம செய்யற ஒவ்வொரு வேலைக்கும் அதிகப்படியான வேலைக்கும் ஆதாரம் வைச்சுக்கனும்
5.கடைசியா, “சின்ன வேலையை ஈஸியா முடிச்சுட்டாலும், அத கஷ்டப்பட்டு செஞ்சமாதிரி” காட்டிக்கனும்.

மொத்தத்துல, நாம வேலை செய்யறமோ இல்லியோ, வேலை செய்யறமாதிரி நடிக்கறத மட்டும் நிறுத்தவே கூடாது.தப்பே பண்ணினாலும், மாரியாத்தா சத்தியமா, நான் பண்ணலனு அசராம, அடிச்சு பொய் சொல்லனும். தப்பித்தவறி, மாட்டிக்கிட்டோம்னா, ஆமா, நாந்தான் பண்ணுனேன், இனி நடக்காம பாத்துக்கறேன், ஒப்புக்குச்சப்பானா ஒரு டயலாக் அடிக்கனும்.

கொஞ்சம் தெளிவா, நாலாவது வருச அப்ரைசல் மீட்டிங் முடிச்சாச்சு. இந்தமுறை அர்ணாப் இண்டர்வியூல கூட நாரயணசாமிய சேர்த்தா மாதிரி, டேமேஜர் கூட, டீம்லீடும் இருந்தார். வழக்கமா, அவங்க நம்மள பேசவிடாம, பேசுவாங்க. இந்ததடவ, நான் எல்லாத்துக்கும் பிதாமகன் விக்ரம் ரியாக்சன் குடுத்ததுல, கொஞ்சம் பயந்து, என்னம்மா, எதாவது பிரச்சனையிருக்கானு கேட்டாங்க.

என்னோட, எதிர்பார்ப்பு இதுதான், இதெல்லாம் நான் செஞ்சுருக்கேன். இவ்ளோ அவார்டு வாங்கியிருக்கேன், க்ளையண்ட்கிட்டயிருந்து வந்த ரெஸ்பான்ஸுனு ரமணா ரேஞ்சுல பில்டப் கொடுத்துட்டேன்.

கொஞ்சம் தைரியமா பேசுனனாலயோ என்னமோ, ப்ரோமோசன் கன்ஃபார்ம்டு. J இன்க்ரிமெண்ட்டைப் பொறுத்து, இதே கடையில டீ ஆத்துறதா இல்லையானு முடிவு பண்ணிட வேண்டியதுதான் பாக்கி. நிச்சயமா, இனி வேறெந்த கடையில போயி குப்பை கொட்டினாலும், என்னால சமாளிக்க முடியும்.அப்ரைசல்ங்கிற பேர்ல வருசாவருசம், ஆப்ப மட்டும் ரைஸ் பண்ணிட்டுருந்த அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிற நேரம் வந்தாச்சு.

இதனால் சகலமானவர்களுக்கும் சொல்றதென்னனா, என்னதான் வேலையை நேசிச்சாலும், அதுக்குரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்காத இடத்துல அந்த வேலையை செய்யறது, அத அவமானப்படுத்தறதுக்குச் சமம்.அம்புட்டுத்தேன்.
                       
                                 சுபம்


Monday, March 10, 2014

தரிசான பரிசு



இந்தவருட முழுஆண்டுத் தேர்வு விடுமுறை, இவ்வளவு சீக்கிரமாக முடிய நான் சைக்கிள் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததும் ஒரு காரணம். கொஞ்சகொஞ்சமாக பெடல்போட ஆரம்பித்து, ரெண்டுகையையும் விட்டு பறவையின் சிறகைப்போல் காற்றில் கைவீசி ஓட்டுமளவிற்கு கற்றுக்கொண்டுவிட்டேன்.

நதியாவாகிய நான் நாளை விடிந்தபின் ஊரின் பெரிய ஸ்கூலில் ஆறாம் வகுப்பில் சேரப்போகிறேன். நானும் எவ்வளவோ புரண்டுபுரண்டு படுத்தேன், தூக்கம் வரவில்லை.மனசு முழுசும் புது ஸ்கூல் பற்றிய கற்பனைகள் ஆக்கிரமித்திருந்தன
ஸ்கூல் ரொம்ப தூரம் என்பதால், சீக்கிரமே கெளம்பனும் என்று அம்மா சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆறு மணிக்கெல்லாம் எழுந்துவிட்டேன், ஆசைஆசையாய் கிளம்பினேன். வேகவேகமாக குளித்துவிட்டு என்னிடமிருந்ததிலயே நல்ல உடையென்று கருதுமொன்றை போட்டுக்கொண்டு வந்தேன்.

”இதையேண்டி போட்ட?” அம்மா திட்டிக்கொண்டே பீரோவைத் திறந்து நான் சுமாரென ரகம் பிரித்த வயலட் நிற கவுனை நீட்டினார்.”இதுவா? அய்யே.” முகச்சுழிப்பால் அந்த கவுனுக்கு மரியாதை செய்துவிட்டு அம்மாவிடம் கெஞ்சினேன்.இது வேணாம்மா, தீபாவளி ட்ரெஸ் போட்டுக்கறேன்மா..ப்ளீஸ்மா.

அது பெரிய ஸ்கூல்லமா நெறையபேரு வருவாங்க, எல்லாரும் புது ட்ரெஸ் போட்டுட்டு வருவாங்கள்ல..நானும் புதுட்ரெஸ் போட்டுக்கறேன்மா.

இரட்டைஜடையின் பின்னலை மஞ்சள் நிற ரிப்பனால் முடிபோட்டுக்கொண்டே, வாயிலிருந்த சீப்பை எடுத்த அம்மா, அதில்லடா, ”உனக்கு யூனிஃபார்ம் எடுக்கிற வரை நீ கலர் ட்ரெஸ்தானே போடனும், அப்புறம் சனிக்கிழமை ஸ்கூல்வைச்சா அப்பவும் கலர்ட்ரெஸ்தான்,எதாவது விசேசம் வந்தாலும் அதையேதான் போடனும்,அதனால கொஞ்சம் பழசாயிருக்கற ட்ரெஸெல்லாம் ஸ்கூலுக்கு போடு,அதுக்குள்ள அப்பா யூனிஃபார்ம் எடுத்துருவார்”, என்றார். அப்றம் கலர் ட்ரெஸ் போடறன்னிக்கு நீ  உன்னோட புது ட்ரெஸெல்லாம் போட்டுட்டு போவியாம்,ம்ம்ம்..என் முகவாயைத் தடவி முத்தமிட்டு நகர்ந்துவிட்டார்..

அப்போதைக்கு அந்த முத்தம் மட்டுமே ஆறுதலாயிருந்தது. சமாதானமடையாத மனம், புது பள்ளிக்குப் போகும் ஆர்வத்தின்பால் திசைதிரும்பியது.ஐந்துவருட கடும் உழைப்பின் காரணமாக தேய்ந்துபோய் நிறைய காயம் சுமந்திருந்த பழைய பேக்குக்கு பழிப்பு காட்டிவிட்டு, அப்பா வாங்கிக்கொடுத்த புதுபேக்கில் புத்தகங்களை அடுக்கினேன். அப்போதுதான் கவனித்தேன், இன்னும் ரெண்டு நோட்ஸீம்,மூணு புக்கும் வாங்கவில்லை.
பேக்கை அப்படியே போட்டுவிட்டு, அப்பாவிடம் ஓடினேன்.

அப்பா,அப்பா..இன்னும் கொஞ்சம் நோட்ஸீம் புக்கும் வாங்கவேயில்லப்பா, மறந்துட்டிங்களா?.

கையிலிருந்த பணத்திற்கு மட்டுமே புத்தகங்கள் வாங்கியதை மறைக்க நதியாவின் அப்பாவிற்கு மறதி உதவியது.ஆமா நதியா,அப்பா மறந்தேபோயிட்டேன்.இதுக்குத்தான் அப்பவே உன்ன ஒருபேப்பர்ல எழுதிகுடுக்கச் சொன்னேன்.சரிவிடு, இன்னிக்கு இதெல்லாம் எடுத்துட்டு போ,இன்னும் ரெண்டுநாள்ல மீதி புஸ்தகம்லாம் வாங்கலாம்.

சரிப்பா.உண்மையில் எனக்கு புத்தகமில்லையென்பது குறையில்லை,புது பேக்கில் இன்னும் இடமிருக்கிறதே என்பதுதான்!!

டிபன் எடுத்து உள்ள வை, மிச்சவைக்காம சாப்பிடனும் . இங்கமாதிரியே மெதுவா சாப்பிடாதே,அங்கயெல்லாம் மணியடிச்சதும் க்ளாஸ்க்கு போயிடனும். அம்மா இதையும் இதைத்தொடர்ந்து ஏதேதோவும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்

என் கவனம் முழுக்க வாசற்படியை நோக்கியேயிருந்தது. எங்கள் தெருவிலிருந்து அந்தப் பள்ளிக்கு நடந்துசெல்லும் பக்கத்துவீட்டு பெண்கள் எல்லாரும் வந்து, நதியா.. வா.போகலாம் என அழைத்ததுதான் தாமதம், அவசரமாக பேக்கை மாட்டிக்கொண்டு சாப்பாட்டுகூடையையும் தூக்கிக்கொண்டு துள்ளிக்குதித்து ஓடினேன்.

ஜெயந்தி, செல்லா, பாத்துக்கோங்க இவளை. மத்தியானம் ஒழுங்கா சாப்பிட சொல்லுங்க. அம்மாவின் அட்வைஸ் இப்போது அவர்களை குறிவைத்திருந்தது.சரி, சித்தி நாங்க பாத்துக்கறோம் என சொல்லிவிட்டு ஜெயந்தியக்கா என் கைபிடித்துக் கொண்டாள்.
கதைபேசிக்கொண்டே உற்சாகமாய்  நடக்க ஆரம்பித்தோம்.வீட்டிலிருந்து ரெண்டு கிலோமீட்டர் தூரத்திலிருந்தது ஸ்கூல் .ஜெயந்தியக்காவும் செல்லாக்காவும் என் க்ளாஸை தேடிப்பிடித்து என்னை உள்ளே அனுப்பிவிட்டுச் சென்றனர்.

ஜெயந்தியக்கா திரும்பவும் என் க்ளாஸீக்குள் வந்து, சாயந்திரம் ஸ்கூல் முடிஞ்சதும் கேட் கிட்ட நிக்கச்சொல்லிவிட்டு போனாள்.

ரெண்டுமூணு மிஸ் வந்தனர்.தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு ஒவ்வொருத்தர் பேரும் ஊரும் அப்பாவின் தொழிலும் சொல்லச்சொன்னார்கள்.அப்பாவுக்கு கடலை உருண்டை, மசால் கடலையெல்லாம் செய்யும் வியாபாரமென சொல்ல கொஞ்சம் சங்கடமாயிருந்ததெனக்கு.ஒருவழியாய் முதல்நாள் முடிந்தது, ஜெயந்தியக்கா சொன்னபடி சமர்த்தாக கேட் கிட்ட போய் நின்னுக்கிட்டேன். 

மத்த பொண்ணுங்களலாம் வரவும் பேசிக்கிட்டே நடக்க ஆரம்பிச்சோம். கொஞ்சதூரம் போனதும் எனக்கு கால்வலிக்க ஆரம்பிச்சது.செல்லாக்கா, கொஞ்சம் மெதுவா போலாமா எனக்கு கால்வலிக்குது, கெஞ்சலாய் சொன்னேன்.

அதுசரி இப்பிடி நடந்து பழகினா, எப்ப வீடு போய்சேர, செல்லாக்கா அலுத்துகிச்சு.
ஜெயந்தி அக்காதான் , என் சாப்பாட்டுக்கூடையை கைல வாங்கிட்டு மத்தவங்கள முன்னே போகச்சொல்லிட்டு, என்னோட மெதுவா நடந்துவந்துச்சு.

என்னென்னமோ கதையெல்லாம் பேசிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.வீட்டுக்கு போனதும், விற்க தயாரான இட்லி மாவைக் கலக்கிகொண்டிருந்த அம்மாவைக் கட்டிக்கிட்டு, கால் வலிக்குதுனு சொன்னேன். அம்மாவுக்கு வருமானம், அந்த மாவு தான்.அது ஒண்ணுமில்லமா, புதுசா ரொம்ப தூரம் நடண்ட்தையில்ல.. அதுனாலதான் வலிக்குது, தூங்கும்போது அம்மா தைலம் தேய்ச்சுவிடறேன் சரியாய்டும், விடு. அம்மா ஆறுதல்படுத்தினார்.

ஸ்கூலைப் பற்றிய புது மோகம் தீர்ந்து,நாட்கள் செல்லச்செல்ல எனக்கு சக பள்ளிக்கூட பெண்களோடு நடப்பது பிரம்மப் பிரயத்தமானது. ஓட்டமும் நடையுமாக அவர்களோடு சேர்ந்து போகவேண்டும். இதில்  நான் ஓடியும், அவர்கள் நடந்தும் வந்தனர் என்பது தான் சரியாயிருக்கும்.

இப்பிடி ஓட்டமும் நடையுமாக அவர்களைத் தொடர சிரமப்பட்டதைப் பார்த்து, பெரும்பாலான நாட்கள் என் சாப்பாட்டுக்கூடையை ஜெயந்தி அக்காவேதான் தூக்கிக்கொண்டு வருவாள்.தினமும் சாயந்திரம் வீட்டில் வந்து கால்வலியென நான் புலம்புவது வாடிக்கையானது.

நீ ஒழுங்கா,சத்தா சாப்பிடாதனாலதான் கால்வலி,கைவலியெல்லாம் வருது. அப்பாவின் திட்டு கலந்த பதில் இப்பிடியாக வரும்.

ஒருமாதம் ஓடியிருந்தது, புது ட்ரெஸ் என்று நான் கருதிய எந்தன் சிவப்பு அம்பர்லா கவுன் அடிக்கடி போட்டதின் விளைவாக வெளுத்திருந்தது. இன்றைக்கு அதைத்தான் போட்டிருந்தேன். வழக்கம்போல் மத்த பெண்கள் வாசலில் வந்து கூப்பிட்டதும், பேக்கை எடுத்துக்கொண்டு அப்பாவிடம் சென்றேன்,

அப்பா, இன்னும் நாலு பேர்தான் யூனிஃபார்ம் எடுக்கல.இந்த வாரமாச்சும் எடுத்துதாங்கப்பா. கவலையில் நனைத்து சோகத்தில் பட்டை தீட்டிய வார்த்தகளை சொல்லிவிட்டு கிளம்பினேன்.

சிறிதுநேரம் கழித்துதான் கவனித்தேன், எங்களோடு வரும் சரண்யா, அன்று வரவில்லை.ஜெயந்தி அக்காவிடம் காரணம் கேட்க, சரண்யா புது சைக்கிள் வாங்கிவிட்டதாகவும் இனிமேல் எங்களுடன் வரமாட்டாள் எனவும் சொன்னார்கள்.
கவலையை சுமந்துகொண்டு போய் பள்ளியில் இறக்குவதும், பள்ளியிலிருந்து பரிசாய் கால்வலியோடு வீடு வருவதுமாக என் நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன.இன்னும் ஒருவாரத்தில் மிட்-டெர்ம் டெஸ்ட் வரவிருந்தது. பள்ளியின் முதல்நாள் வாங்காமல் வைத்திருந்த நோட்ஸை நான் இன்னும் வாங்கவில்லை.

ட்யூசன் மிஸ் யாரிடமோ சொல்லி பழைய நோட்ஸ் ஒன்றை வாங்கிக்கொடுத்தார்.அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் எனக்கு முன்பு ட்யூசனில் படித்த யாரவது ஒருவரின் புத்தகங்களும் நோட்ஸீம் அடுத்தவருடம் என் கைகளில் வந்து சேர்வது அவரின் பொறுப்பானது.

மிட்-டெர்ம் டெஸ்ட்டில் செகண்ட் ரேங்க் வாங்கியிருந்தேன்.வீட்டின் பக்கத்தில் குடியிருந்த ஸ்கூல் டீச்சர் அப்பாவை பார்த்து, உங்க பொண்ணு நல்லா படிக்கிறா, அவள என்கரேஜ் பண்ணி படிக்கவைச்சா பெரியாளா வருவா, என்று சொல்லிவிட்டுப் போனார்.
அந்த வார்த்தைகள் அப்பாவிற்கு கொடுத்த ஊக்கத்தினாலோ, என்னமோ யாரிடமோ கடன்வாங்கி ரெண்டேநாளில் புது யூனிபார்ம் வாங்கிகொடுத்தார்.அடுத்தநாள் திரும்ப முதல் நாள் பள்ளிக்குச் சென்ற சந்தோசம் வந்து தொற்றிக்கொண்டது.கால்வலியை தற்காலிகமாக மறக்கவும் அது உதவியது.

இரண்டுவருடம் முடிந்து இப்போது எட்டாம் வகுப்பு. இன்று முதல் நாள் வகுப்பு. முன்புபோல் அம்மா அதிகமாக அறிவுரை எதுவும் சொல்லவில்லை, போய்ட்டுவரேன்மா, போய்ட்டுவரேன்ப்பா என்பதைமட்டும் சொல்லிவிட்டு நானே கிளம்பிச் சென்றேன். தம்பியை புது ஸ்கூலில் சேர்க்கும் காரணத்தால், இந்தவருடமும் என் சைக்கிள் கோரிக்கைக்கு வீட்டில் தடா போடப்பட்டது.

முந்தி, எங்களோடு வரும் பெண்களில் யாரும் வரவில்லை. நான், ஜெயந்தி அக்கா மட்டும்தான். செல்லா அக்கா பத்தாவது வரை படித்துவிட்டதால் அவங்க வீட்டில் நிறுத்திட்டாங்க. மாலதி இந்த வருசமிருந்து ஆட்டோல போயிடுமாம். நாம ரெண்டுபேருதான் இனிமே. அன்றைய முக்கிய செய்தியை வாசித்தாள், ஜெயந்தி அக்கா.
அப்பிடியா அக்கா, என யோசனையில் ஆழ்ந்துபோனேன்.என் யோசனை எப்போது பாதயாத்திரைக்கு சுபம் போடுவோம் என்பதைப் பற்றி சுற்றிக்கொண்டிருந்தது.

எங்களுக்குபின் ஏரியாவில் உள்ள பெண்களெல்லாம், ஒன்று சைக்கிள் இல்லை ஆட்டோ என முடிவுசெய்த பின்னே எங்கள் பள்ளியை தேர்ந்தெடுத்திருந்தனர். அதனால் நானும் ஜெயந்தி அக்காவும் மட்டுமே தனிப்பெரும்பான்மையாய் பாதயாத்திரையை நடத்திக்கொண்டிருந்தோம். இரண்டுவருட நடைபயணம், எனக்கு சில குறுக்கு பாதைகளையும் கொஞ்சம் வேகமாக நடக்கவும் பழக்கப்படுத்தியிருந்தது.

இப்போதெல்லாம் வீட்டிலிருந்து 20 நிமிடத்தில் ஸ்கூலுக்கு போய்விடுகிறேன், ஆனால் ஒவ்வொரு நாளும் லேட்டாக வந்தவர்களின் கூட்டத்தில் நானும் இடம்பெறுவதை தவிர்க்கமுடிவதில்லை.

ஜெயந்தி அக்கா ஒருநாள் லீவு போட்டுவிட, தன்னந்தனியே போய்க்கொண்டிருந்தேன் அப்போது எங்களோடு வந்துகொண்டிருந்த லட்சுமி, தன் புதுசைக்கிள் என்மேல் உரச பக்கத்தில் வந்து பெல் அடித்தாள்.

திரும்பிப்பார்த்தேன், லட்சுமி அப்பிடியேதான் இருந்தாள் என நினைக்கிறேன் சரியாக பார்க்கவில்லை. என் பார்வை முழுதும், அவளின் ப்ளூ கலர் லேடிபேர்டு மீது மையல் கொண்டிருந்தது.

என்ன லட்சுமி, புது சைக்கிள் வாங்கிட்டியா என்றபடி அந்த ப்ளுலேடியின் தேகத்தை மிக மென்மையாக தடவிப் பார்த்தேன்.

ம்ம், ஆமா, நதியா நல்லாருக்குல்ல, ரெண்டாயிரம் ரூபாய்னு எங்கப்பா சொன்னார். சைக்கிளின் மினுமினுப்பு லட்சுமியின் கண்களில் பட்டு தெறித்தது. சரி, ஏன் தனியா போற, எங்கூட வா, நான் உன்ன வைச்சு டபுள்ஸ் கூட்டிட்டுப் போறேன், என்றாள். நானும் ஆசையாக அவளோடு சேர்ந்துகொண்டேன், இரண்டுபேருமாக மாத்திமாத்தி அழுத்தி ஸ்கூல் போய் சேர்ந்தோம்.

அன்னைக்கு சாயந்திரம் வீட்டுக்குள்ள நுழைஞ்சதுலயிருந்து தூங்கறவரை ப்ளுலேடி புராணம் பாடிக்கிட்டுருந்தேன்.என் புலம்பல் தாங்கமாலும் யதார்த்தத்தை எனக்கு புரியவைக்கவும், அப்பா ஒரு கண்டிசன் போட்டார்.

நீ பத்தாவதுல 400 மார்க்குக்கு மேல வாங்கு, நான் கண்டிப்பா உனக்கு சைக்கிள் வாங்கித்தரேன், சொல்லிக்கொண்டே சட்டையை ஹேங்கரில் மாட்டினார் அப்பா.
பத்தாவதுலயா, அதுவரைக்கும் நடந்துதான் போகனுமா? முழுக்கமுழுக்க ஏக்கம் தொக்கி நின்ற குரலில் கேட்டுவிட்டு விசும்பலோடு தூங்கிப்போனேன்.

அதன்பின் வந்த நாட்களில்  நான் வகுப்பில் எழுந்து நின்றால் இரண்டு காரணம் இருக்கும்.
1.எதாவது கேள்விக்கு சரளமாக பதில் சொல்லிக்கொண்டு.
2.எல்லாரும் ஃபீஸ் கட்டிய பின் இன்னமும் கட்டவில்லை என்பதை குரல்கம்ம முணகிக்கொண்டு.

பத்தாம் வகுப்பும் ஆரம்பித்தது. காலம் தன் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறந்தது.ரிசல்ட் பாத்து வர சென்ற அப்பாவை எதிர்பார்த்து அம்மாவும் நானும் நொடிக்கொருதரம் வாசலைப் பார்த்தோம்.

வாசலில் செருப்பு சத்தம் கேட்டது, பக்கத்து வீட்டுக்காரர்களெல்லாம் அப்பாவிடம் விசாரித்துமுடித்து அப்பா உள்ளே வரும்வரை நான் இறுகக் கண்மூடி காதைப் பொத்தியிருந்தேன்.

மனசுக்குள், கடவுளே நிச்சயமாக 450 மார்க் மேலதான் இருக்கனும், இடைவிடாமல் பிரார்த்தித்துக்கொண்டிருந்தேன்.

என்னங்க, எவ்ளோ மார்க்? பேப்பர்ல எழுதி வாங்கியாந்திங்களா? அம்மாவின் கேள்விக்கு பதிலாக ஒரு சின்ன துண்டு காகிதத்தை நீட்டினார், அப்பா.

எலக்ட்ரான்களும் புரோட்டான்களும் மோதிக்கொண்டிருந்தன என் பார்வைபுலத்தில்.

மெல்லமாக அப்பா சொன்னார், என்ன பரீட்சை எழுதுன, 45 மார்க்க விட்டுட்டு வந்துருக்க.

அழத்தொடங்கிய பின்தான் அர்த்தம் புரிந்தது, 45 மார்க் ஆ, எந்த சப்ஜெக்ட்ல பா?

கேவிக்கொண்டே கைநீட்டி அந்த துண்டு பேப்பரை வாங்கினேன். என் பார்வை பேப்பரில் பதியும்போது என்னுயரம் சற்று கூடியிருந்தது, அப்பா என்னை தூக்கியிருந்தார்.

பேனாவின் நீலநிற ரத்தத்தில் ”மொத்தம் மதிப்பெண் =455” என்று எழுதியிருந்தது.
வீடு முழுக்க பரவசம் பரவியிருந்தது.ஜெயந்தி அக்காவும் பூங்கொடியும் ஓடிவந்தனர்.
நதியா. நீ தான் நம்ம ஏரியாலயே நெறைய மார்க் வாங்கியிருக்க., இருவரும் என்னைக் கட்டிக்கொண்டனர். தெருவில் இருப்பவர்களெல்லாம் வந்துவந்து வாழ்த்துசொல்லி போனார்கள். சந்தோச சப்தங்கள் ஓய்ந்ததும், அப்பாவிடம் சைக்கிள் புராணத்தை ஆரம்பித்தேன்.

அப்பா அமைதி காத்தார், பின் தொண்டையை செருமிக்கொண்டு, வாங்கலாம்பா, கடனவொடன வாங்கியாச்சும் இந்ததடவ சைக்கிள் வாங்கிடலாம், என் கையை பிடித்துக்கொண்டு சொன்னார்.

ஸ்கூல் ரிஓப்பனாக இன்னும் இரண்டு மாசமிருந்தது, அப்பாவிடம் எப்படியோ அனுமதி வாங்கி, ஒரு எஸ்டிடி பூத்தில் வேலைக்குபோகத் தொடங்கினேன். என் பங்காக சைக்கிளுக்கு கொஞ்சம் பணம் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில்.

சரியாக ஸ்கூல் தொடங்கி மூன்றாவது வாரம், அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது. மதுரை ராஜாஜி ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணி அம்மா கூட தங்க வேண்டியதானது.

அப்பாவின் வியாபரமும், அம்மாவின் கைத்தொழிலும் என்னை நம்பி விடப்பட்டிருந்தது. மாசக்கணக்கில் தங்கியிருந்து கேன்சர் என்று கண்டுபிடித்து ட்ரீட்மெண்ட் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள்.

மாசத்துக்கொருதடவ அம்மா வந்து வீட்டுக்கணக்கும், வியாபாரக் கணக்கும் சரிபாத்து வேண்டியதெல்லாம் வாங்கிப்போட்டுட்டு போனாங்க.

இந்தக் களேபரத்தில் என் சைக்கிள் ஆசை பரதேசம் போய்விட்டது. சேருமிடம் தெரியாத பாதங்களுக்கு பாதை பற்றி பெரிதாய் என்ன கவலை இருக்கப்போகிறது.

ஒன்பதரைக்கு ஸ்கூல் என்றால், நான் வீட்டிலிருந்து ஒன்பதேகாலுக்குத்தான் கெளம்புவேன்.அதுவரை வேலைகள் சரியாக இருக்கும். சாயந்திரம் நாலேகாலுக்கு முடிகிறதென்றால் நாலரைக்கு வீட்டிலிருப்பேன், அடுத்த வேலைகளை கவனிக்க.

வீட்டுக்குள் வந்ததும், சூரியம் எஃப் எம் போட்டுவிட்டு வேலைகளை ஆரம்பிப்பேன்.அரிசி களைந்து கிரைண்டரில் போட்டுவிட்டு, தண்ணிபிடித்து வைத்து, தம்பியை வசூலுக்கு அனுப்பிவிட்டு,வீட்டுக்கு எள் இடிக்கவரும் யசோதா அக்காவுக்கு காசு கொடுத்து, இடித்ததை வாங்கி, உருண்டைகளாக உருட்டி பத்திரப்படுத்தி இடையிடையே கிரைண்டரை கவனித்து அடுத்தநாளுக்கான மாவை ஆட்டிமுடித்தும், அந்தநாளுக்கான மாவை விற்றுமுடித்தும் ஆயாசமாகையில் மறுநாள் சமையலுக்கானதை எடுத்துவைக்க ஞாபகம் வரும், மணி பணிரெண்டைத் தொட்டிருக்கும்.

அதிகாலை நாலரைக்கு முழிப்புதட்டும். சாயந்திரம் விக்கவேண்டிய மாவை ஆட்டிவைத்து, சமையலை முடித்து, தம்பியை ஸ்கூலுக்கு அனுப்பி, வீட்டைபூட்டி கெளம்பும்போது மணி ஒன்பதரையாகி விடும் சிலநாள்களில்.

பதினொன்றாம் வகுப்பில் என்ன படித்தேன் என்பதே எனக்கு நினைவில் இல்லை.ரெக்கார்ட் நோட்டெல்லாம் கூட பள்ளித்தோழிகள்தான் ஆளுக்கொன்றாய் எழுதிமுடித்து தந்தார்கள்.எப்படியோ பெயிலாகாமல் தப்பித்துக்கொண்டிருந்தேன்.

பதினொன்றாம் வகுப்பு முடியும் தருவாயில், அப்பா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தார். பாதிக்குமேலே இளைத்திருந்தார். குரலில் முன்புபோல கம்பீரம் இல்லை. இதனிடையே என் சைக்கிள் ஆசை துருயேறிப் போயிருந்தது.

பனிரெண்டாம் வகுப்பு தொடங்கும்போது, பாடத்திற்கொன்றாக நாலு ட்யூசன் இருந்தது. காலை நாலரை மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி ஐஞ்சரைக்குள் ட்யூசன் போகவேண்டும். எட்டு மணிக்கு ரெண்டு ட்யூசன் முடிந்துவிடும். ஸ்கூல் ஒன்பதரைக்குத் தான். ஆனால் அங்கிருந்து வீட்டுக்குவந்துசெல்ல முடியாது. அதனால்,அங்கிருந்தே அப்பிடியே ஸ்கூலுக்கு போய்விடுவேன். அம்மா வேறு யாரிடமாவது சாப்பாட்டை கொடுத்தனுப்புவார்கள்.

அப்பாவின் உடல்நிலை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டிருந்தது, நைட்டெல்லாம் கூடயிருந்து பாத்துவிட்டு நான் கெளம்பும்போதுதான் அம்மா லேசா கண் அசந்திருப்பார்கள்.அதுமாதிரி நேரங்களில் அப்பா என்னோடு தெருமுனை வரை பேசிக்கொண்டே நடந்துவருவார், தெருமுக்கு கடையில் டீயும் பன்னும் வாங்கி குடுத்துவிட்டு, நம்ம சைக்கிள்கடை தண்டபாணி கிட்ட செகண்டட் சைக்கிள் ஒண்ணு சொல்லிருக்கேன்பா, சீக்கிரம் வாங்கனும், எவ்ளோ தூரம் நடந்து சிரமப்படுற, என்பார்.

சின்னசின்ன அறிவுரைகள், டீக்கடை மாஸ்டரிடம், ஆடையை வடிகட்டிட்டு குடுப்பா, புள்ளைக்கு புடிக்காதெனும் அவரின் வாஞ்சையான குரல், இதெல்லாம் அப்பாவிடம் என் நெருக்கத்தை அதிகப்படுத்தியிருந்தது.

என்றேனும் லேட்டாகிவிட்டால், நான் நடக்கும் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், அவருக்கு மூச்சு திணறும். நடைபழகிக் கொடுத்தவர் என்னோடு நடக்கவியலாமல் திணறுவதைப் பார்க்க, மனதைப் பிசையுமெனக்கு.

நானே போய்க்கறேன், நீங்க இருங்கப்பா எனச்சொன்னாலும் கேட்கமாட்டார். வயசுப்புள்ள இந்நேரத்துல தனியா போகவா, என்னால முடிஞ்சவர கூடவரேன் வா, என்பார்.
ஸ்கூலில் யாருடைய லேடிபேர்டு சைக்கிளையாவது பார்க்க நேர்கையில், தூசியாய் என் பார்வை அதன்மீது படிந்து மீளுவதை மட்டும் தவிர்க்க இயலவேயில்லை.

ஸ்கூல் ஒவரானதும் கெமிஸ்ட்ரி ட்யூசன் முடித்துவிட்டு, அங்கிருந்து மேத்ஸ் ட்யூசன் போக வேண்டும், நடந்துவந்தால் லேட்டாகிவிடுமென்பதால் தோழி சுஜியோடு சைக்கிளில் வந்துவிடுவேன்.

அன்று, கெமிஸ்ட்ரி ட்யூசன் முடிந்து எனக்காக சுஜியும் இன்னும் சிலரும் காத்திருக்க, எதோ சந்தேகம் கேட்ட ட்யூசன் பையனிடம் பேசிவிட்டு வந்ததில் லேட்டாகிவிட்டது. அவசரமாக பேக்கை தூக்கிக்கொண்டு சுஜியைத் தேடினால், முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடிக்க, அந்த ரோட்டின் கடைசியில் நின்று இருந்தாள், மற்றவர்கள் அவளை விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

சாரி, சுஜி, அந்தப் பையனாலதான் லேட் ஆகிடுச்சு.

உனக்காக நான் வெயிட் பண்ணிட்டுருந்தா, நீ எல்லார்கிட்டயும் பல்லகாட்டிட்டு சாவகாசமா வா. ச்சே, இன்னிக்கு நானும் லேட்.

அவளின் வார்த்தை மிகமோசமாக என்னைத் தாக்கியது.உதவி வாங்குவர்களுக்கு இருக்கவேகூடாத தன்மானம் என்னில் துளிர்விட்டது.

இத்தன நாள் ஹெல்ப் பண்ணினதுக்கு ரொம்ப தாங்க்ஸ்,இனிமேல் எனக்காக வெயிட் பண்ணவேணாம்.அவமானத்துக்கும் அழுகைக்கும் இடையே வார்த்தைகள் வெளிப்பட்டன.

போனாபோகுதுனு ஹெல்ப் பண்ணின, நீ இதுவும் பேசுவ, இன்னமும் பேசுவ. என்னமோ பண்ணு,நான் போறேன். பதிலுக்கு காத்திராமல் சென்றுவிட்டாள்.

இத்தனை நாள் என்னுள் பொதிந்திருந்த சைக்கிள் ஆசை, அழுகையாய் வெடித்தது. ட்யூசனுக்கு போகவில்லை. சிந்தனை முழுக்க கிடைக்காத சைக்கிளை நினைத்துத் தேம்ப கால்கள் என்னை வீட்டுக்கு இழுத்துச்சென்றன.

அம்மா, யாருக்கோ பாத்திரத்தில் மாவை ஊத்தி வெளியேவைத்து விட்டு, என்னடி, உடம்பு சரியில்லயா? முகம் ஒரு மாதிரியிருக்கு, ட்யூசனுக்கும் போகாம வீட்டுக்கு வந்துட்ட என வரிசையாக கேள்வியை அடுக்கினார்.

ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த உள்ளத்தின் ஆதங்கம் அத்தனையும் அம்மாவின் மேல் திரும்பியது.

என்னால முடியலமா, எத்தன வருசமா கேட்டேன், ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்திங்களா? என்னால நடந்தே சாகமுடியலமா. யார்யார்கிட்டயோ கெஞ்சி என்னால அங்கயும் இங்கயும் அலைய முடியாது.

நதியா, என்ன ஆச்சு, ஏன்மா இப்பிடி பேசற என்ற அம்மாவிடம் மேற்கொண்டு எதுவும் பேசமுடியவில்லை.துக்கத்தையாவது தொண்டைக்குழியோடு அடைத்துக்கொள்ளலாம், திமிரும் கண்ணீரை எதைக்கொண்டு நிறுத்துவது.

கண்களில் நீர்த்திரை மறைக்க அப்பாவின் முகம் நிழலாக தெரிந்தது. எதோ பேச ஆரம்பித்து இருமலாக ஓய்ந்து, மூச்சு இளைக்க என்னைப் பார்த்தார். அந்த கண்ணில் இயலாமை அப்பியிருந்தது.

அடுத்தநாள் எந்த ட்யூசனுக்கும் போகாமல் ஸ்கூலுக்கு வந்திருந்தேன். சுஜி வந்து கோபமா, சாரி நதி, மன்னிச்சுடு என்றாள். திரும்பவும் அழுகைதான்.

மதியானம் செகண்ட் ப்ரீயட் நடந்துகொண்டிருந்தபோது, ப்யூன் அண்ணா வந்து என் பேர் சொல்லிக் கூப்பிட்டார். என் பெஞ்சிலிருந்து வெளியே வருவதற்குள், அபாயத்தின் அறிகுறியாக அசாதாரணமான உணர்வொன்று என்னை ஆட்கொண்டது.

நீ தான் நதியாவாமா? பரிதாபம் கலந்த பார்வையால் அளந்தபடி கேட்டார்.

ஆமாம்,என்ன அண்ணா?

உங்க வீட்ல யாருக்காவது உடம்பு சரியில்லயாமா?

எங்க அப்பாவுக்குத் தான் உடம்பு சரியில்லனா. ஏன் கேட்கறீங்க.

அதுவந்து, அவர் மெல்ல பீடிகைபோட என் நெஞ்சு பத்துமடங்கு அதிகமாக துடிக்கத்தொடங்கியது.

என்னன்னா, சொல்லுங்க.

உங்க அப்பாக்கு உடம்பு சரியில்லமா, உன்ன வீட்டுக்கு வரச் சொன்னாங்க, நீ கெளம்பு. HM பெர்மிசன் குடுத்துட்டாரு.

எனக்கு சரியாக இன்னதென்று எதுவும் பிடிபடவில்லை, ஆனால் இயல்பாக இருக்கவிடாமல் எதோ ஒன்று தடுத்தது. பக்கத்துவீட்டு சாமி அண்ணா, ஆட்டோவோடு ஸ்கூல் வாசலில் நின்றிருந்தார்.என்னவென்று அந்த அண்ணாவிடம் விசாரிக்கத் தோணவில்லை.

தெருவில் ஆட்டோ நுழைகையில், எல்லா வீட்டு வாசல்களிலும் தலைகள் தென்பட்டன.
மூளை எதையோ புரிந்துகொண்டது, அதை ஏற்காமல் இதயம் மறுக்க, நெஞ்சின் அடியாழத்திலிருந்து வலியின் வீரியத்தோடு ”அப்பா” என அலறிக்கொண்டே வீட்டுக்குள் ஓடினேன்.

அப்பா இருமலிடமிருந்தும், இந்த உலகத்திடமிருந்தும் விடைபெற்று, நெடுநாளுக்குப் பின் நிம்மதியான நிரந்தரமான தூக்கத்தை தழுவியிருந்தார்.

அம்மாவின் கைகளுக்குள் நானும் தம்பியும் அடைக்கலமாகி அழுதுகொண்டிருந்தோம்..கதறல் எங்கள்வீட்டு இசையாகியிருந்தது, மரத்துப்போன உறவுகளையும் மறந்துபோன உரிமைகளையும் புதுப்பித்துக்கொண்டு உறவினர்கள் வர ஆரம்பித்திருந்தார்கள்.

அப்பாவின் பேர் சொல்லி, ஒருவர் கேட்பதாக கீதா அத்தைசொல்ல வாசலுக்கு வந்தேன், குள்ளமான ஒருவர் சித்தப்பாவிடம் பேசிக்கொண்டிருந்தார்.

நான், சைக்கிள் கடை தண்டபாணிங்க, உங்க அண்ணன் செகண்டட் சைக்கிள் சொல்லிருந்தார். அவர் கேட்ட வெலைல இன்னிக்குதான் ஓண்ணு கடைக்கு வந்துச்சு, அதான் கையோட குடுத்துட்டு போலாம்னு வந்தேன்,அதுக்குள்ள இப்பிடியாகி போச்சு.ஒரு சைக்கிளை கைகாட்டி, இந்தாங்க சாவி, என ஒப்படைத்துவிட்டு சென்றார்.

இத்தனைவருட சைக்கிள் ஆசை, இப்போது பல ஜென்ம வெறுப்பாக மாறியிருந்தது.கடைசிவரை நான் அந்த சைக்கிளை ஓட்டவில்லை.எனக்கு நீ வேண்டாம், என் அப்பா போதுமென பலநாட்கள் அந்த சைக்கிளை பார்த்து,அரற்றியிருக்கிறேன்.
என் துக்கம் மொத்தமும் உயிர்பெற்று அந்த கருப்புநிற சைக்கிள் ரூபத்தில் இன்றும் வாசலில்.