Sunday, December 22, 2013

நினைவு சூழ் தனிமை-1






சுகித்துக்கொண்டே சபிக்கிறேன் உன் நினைவுகளை.
               
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

உன் துளி நினைவு,என்னை விழுங்கும் ஆழிப்பேரலை!
        
 """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

உன் சிறு அலட்சியம் போலொரு பெருவேதனை எனக்கு வேறெதுவுமில்லை

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

உன் நினைவை மட்டும் சுமந்து நடமாடும் விசித்திர கோமா நோயாளி நான்.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
சஞ்சலமான மனதின் வலி, விழியோரம் நீர்த்திவலைகளாய் சஞ்சரிக்கின்றது.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இருதயம் இரு இதயமாகி துடித்தது நீ விலகிச்சென்ற பொழுதில்

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
என் சோகங்களின் மொத்த பிம்பமாக எப்போதும் நீயே இருக்கிறாய்.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
உன்னோடு வாழ்ந்த நாட்கள், கனவில் தினமும் நகல்களாக.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
உனக்கும் எனக்குமான உறவை கொன்று விட்டேன்... உன் மீதான பெயரிடாத என் உணர்வுகளை என்ன செய்ய

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
களவு போன கனவுகளை கவிதையால் மீட்க முயற்சிக்கிறேன், துருப்பாய் உன் நினைவுகள்

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
பிரிவெனும் காயம் தந்ததோடு நிறுத்தியிருக்கலாம் நீ, தழும்பாக நினைவையும் தந்துவிட்டாய்..வாழ்க்கை முழுதும் வலித்துக் கொண்டேயிருக்கட்டுமென்று.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
காற்றைப்போல் நீக்கமற நிறைந்த உன் நினைவுகள்,எதொவொரு தேவநொடியில் நுரையீரல் தீண்டி சுவாசமாக மாறி என்னை திகைக்க வைக்கத் தவறுதேயில்லை.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
நாம் நிறைந்த நிகழ்வுகளோடு துவங்கி, நான் என்ற வெறுமையான நினைவோடு முற்றுப்பெற்றது ,நிறைவேறாத நம் காதல்

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
நாம் கடந்துவந்த வழித்தடங்கள் கலைந்துவிட்டது, நீ தந்த வலித்தடம் மட்டும் வடுவாய் நெஞ்சில்

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
அன்று ஆசையாய் ரசித்த சிணுங்கல்கள் எல்லாம்,இன்று இரவின் மடியில் விசும்பல்களாய்.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
யாருமறியா ஊமையின் கனவாக உன் நினைவு நெஞ்சைக் கவ்விக் கொண்டிருக்கிறது.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
வலிந்து அணியப்பட்ட ஒவ்வொரு புன்னகைக்குப் பின்னும் நிறைந்திருக்கும் புதைத்து வைக்கப்பட்ட வலிகள்.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
சலனமற்ற சிறு தனிமையையும் கூட,சித்ரவதை மிகுந்த பெரும்பொழுதாக மாற்றி இம்சிக்க வல்லவை உன் நினைவுகள்.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
வாள் வீசி கொன்றிருந்தால் ஒரேடியாய் இறந்திருப்பேன், வார்த்தை வீசி கொன்றுவிட்டாய் ஒவ்வொரு நொடியும் இறந்து கொண்டிருக்கிறேன்.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
அன்னப்பறவையைப் போல் பகுத்தறிய முடிந்திருந்தால் அஞ்சனமிட்ட என் விழிகள் தொலைத்த உன் அன்பிற்காக அதிகம் அழுதிருக்காது.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
உன்னைப்பற்றி ஏதேதோ எழுதவேண்டுமென எடுக்கும் காகிதத்தை எழுத்துகளால் நிரப்புவதைவிட கண்ணீர் பட்டு கசக்கி போடுவதே அதிகம்

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
உறங்கிக் கழித்ததை விட அதிகமாய் உன் நினைவோடு உறவாடியே கழிகின்றன,என் இரவுகள்

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
என் ரயில்பயணத்தில் எதிர்திசையில் கடந்துசென்ற மரம் நீ என்றாய்,உண்மைதான் மரம் இன்னும் அங்கேயேதான் நிற்கிறது,ரயில் தான் எதையோ தேடி,ஓடிக்கொண்டே!

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
மழைக்காலத்தின் மரக்கதவுக்கிடையில் சிக்கிக்கொண்டு கிழிசலான பழைய தாவணியொன்று உன் நினைவைப் போல் கையோடு வரவுமில்லை,கதவோடு விடவும் முடியவில்லை.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
துக்கத்தையாவது தொண்டைக்குழியோடு அடைத்துக் கொள்ளலாம், கண்களுக்கு அத்தனை சாமர்த்தியம் போதவில்லை, கண்ணீரை தன்னோடு தக்கவைத்துக்கொள்ள!

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
பிரசவவலியின் வேதனையோடு பாசியைப்போல் பிசுபிசுப்பான உணர்வொன்று மெல்லமெல்ல அவள் முகத்தில் பரவியது,பழைய காதலனை பரிதாபநிலையில் கண்டபோது.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இன்னும் தொடர்ந்திருந்தால் நீ நேசித்த நானும்,நான் நேசித்த நீயும் தொலைந்துபோயிருப்போம்,ஆகவேதான் நேசத்தை நிறுத்தி,உறவை முறித்துக் கொண்டேன்.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
அடம்பிடித்து வாங்கியபலூனை ஆசையாய் கையிலேந்தும்நொடியில் சட்டென உடைந்துபோக சப்தமாய்அழும் குழந்தையானது மனம் நீ பிரிவை பிரகடனப்படுத்திய நொடியில்

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இணையவே முடியாதென தெரிந்தும் சேர்ந்தே பயணிக்கும் தண்டவாளங்களைப்போல என்வாழ்வோடு இணைந்தே பயணிக்கிறது வெறுக்கவும் மறக்கவும் முடியாத உன்நினைவுகள்

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
உருவமறியா காரிருளொன்றுநெஞ்சையழுத்தி தொண்டையடைத்து விழிநீர் வழியச்செய்கிறது இன்னதென்று இனம்காண விகாராமாகச்சிரித்து என்பெயர் எதிர்காலம் என்றது.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இரவின் அடர்த்தி ஆரம்பிக்கையில் பிறந்து யாருமறியா வண்ணம், என் விழியோடு வழிந்து, விடியல் வருமுன் தன் ஆயுள் முடித்துக் கொள்கிறதென் கண்ணீர்.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
உறக்கத்துக்கும் என் மேல் இரக்கமில்லாமல் போனதோ? விடியலுக்கும், அஸ்தமனத்துக்கும் வித்தியாசம் இல்லாமல், கடந்திடும் கணங்கள்; விழிகளில் ஈரங்கள்!

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
நீ விட்டுச்சென்றாயென அழுது ஓய்ந்ததைவிட,உனக்காகவே கருக்கொண்ட ஆசைகளையும்,காதலையும் சிசுக்கொலை செய்ததுதான் நித்தமுமென் நித்திரை சிதைக்கிறது.

   """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
நீ விலகி சென்றநாளில் அடித்துப்பெய்த மழையின் பின்னே விரக்தியின் விளிம்பில் எஞ்சிநின்றது அந்த தேநீர்க்கோப்பையும் அதில் தேங்கிய உன் நினைவுகளுமே.

    """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
காலத்துக்கு ஒப்புவித்த காதலுக்காக நாட்கள் நகர்த்திக்கொண்டிருக்குகிறேன் நினைவு சூழ் தனிமையில்!


    """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

Sunday, November 17, 2013

முதல் சந்திப்பு

அதுவொரு இலையுதிர் காலம்.
பச்சையும் மஞ்சளுமான சருகுகள் சாலையெங்கும் வர்ணம் வாரியிறைத்திருந்தது,
கல்லூரிச் சாலை கலகலப்பான உரையாடல்களை உள்வாங்கிக் ரசித்துக்கொண்டிருந்தது.
புத்தகம் சுமந்து புத்துணர்வு பரப்பி,விடுதி நோக்கி விளையாட்டாய் பேசியபடி இளம்பெண்கள் கூட்டம்.

தோழியொருத்தி உன் நிறம் குறித்துக் கேலிபேச, எதேச்சையாய் சென்றது விழிகள் உன்னிடம்.

முதல் பார்வை…..!  அதுநாள்வரை என் கண்கள் இந்த உலகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது, அன்றுதான் பார்வையைப் பெற்றது.

ஏற்கனவெ என்முகம் உனக்கு அறிமுகம் போலும், சிறு புன்னகையை இதழ்களில் தேக்கி, குறும்பு தவழ உன் கண்களால் பார்க்கிறாய்.

மிருதுவான பட்டாடையொன்றின் மீது, உரசிச்சென்ற பட்டாம்பூச்சி தன்சிறகினில் ஒருநொடி உயிர்ப்பித்துக்கொண்ட முன்ஜென்ம ஸ்பரிசம் வியாபித்திருந்தது நம்மிரு ஜோடி கண்களுக்கு இடைப்பட்ட வெளியில்.

ஓளியின் வேகம் தாண்டிய விழியின் வேகம் உன்னைப் பார்த்துவிட்டுத் திரும்புகிறது.

இத்தனை மாற்றங்களும் சுற்றியிருக்கும் ஒருவரும் அறியாமல் நமக்கு மட்டுமே பிடிபடுகிறது

கண்ணிமைகள் சிமிட்டுவதைவிடவும் அதிகமாக உன்னைப் பார்க்கத்துடிக்க,
ஒரு நானோ செகண்டில் மீண்டும் உன்னை நோக்கி பார்வை வீசுகிறேன், இம்முறை உன்னைச் சரியாய் பார்க்கவேண்டுமென.

உன் கேசம் கடந்து, நெற்றி வழிந்து வந்த பார்வை உன் விழியோடு மோதுகையில் சட்டென வேறுதிசை திருப்பிக் கொண்டேன்

வசமாய் மாட்டிக்கொண்டதால் உன்பக்கமாய் திரும்பவே கூடாதென நினைத்த கணத்தில், அனிச்சை செயலாய் விழி உன்னைச் சேர்ந்தது, அதையும் மீறிய தனிச்சை செயலாய் அங்கேயே நிலைத்து நின்றுவிட்டது.

அப்படியொன்றும் அழகனில்லை நீ, இப்படிச் சொல்லித்தான், உன்னைப் பார்க்கச் சொல்லி உந்தித்தள்ளும் மனதின் ஆவலை அடக்கிக் கொண்டேன்.

இது என்ன, உனக்குமான எனக்குமான இடைவெளியில் நம்மை இணைக்கிறதொரு வானவில்.

தோழிகளின் சிரிப்புச் சத்தம், வளையோசைகளின் அதிர்வு தாண்டி உன் உதட்டசைவை மட்டுமே, அக்கணத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன்.

மேகம் மழைபொழியும்,ஆனால் அன்று வானம் இதமாய் மேகம் பொழிந்தது.

நீயும் நானும் தூரத்தில்,நம் இதயங்கள் மிக அருகில்.

கொஞ்சம் கொஞ்சமாய் உன்னை பார்வையால் அளக்கிறேன்.
திறந்துவிட்ட சட்டையின் முதல் பட்டன்,என்னை கெட்டியாய் பிடித்துக் கொள்ள சற்றே தடுமாறி, நாக்கைக் கடித்து என்னை நானே திட்டிக் கொள்கிறேன்.

பிஞ்சுக்குழந்தையின் சிவந்தபாதத்தில் பட்டாம்பூச்சியொன்று பறந்ததைப்போல் நெஞ்சுக்குழியின் மையத்திலொரு குறுகுறுப்பு, உன் பார்வை என்னைத் தழுவிய நொடியில்.

அடப்பாவி ஏன் இப்படிப் பார்க்கிறாய் என அதட்டுகிற என் பார்வைக்கு நீ மட்டும் என்னவாம் என்ற பதில்பார்வை தருகிறாய்.

எந்தன் முகில்வண்ணத் துகிலும்,வெட்கம் தாளாமல் மெல்ல மெல்ல
இளஞ்சிவப்பாய் மாறிக்கொண்டிருந்தது.உன் ஒவ்வொரு விழிவீச்சுக்கும், மாறும் நிறத்தின் அடர்த்தி அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது.

ஹைய்யோ என நாணம் வழிய கழுத்துச் செயினைக் கடித்துக் கொள்கிறேன்.

திரும்பவும் என் வெட்கமுண்ணும் உன் கள்ளப்பார்வை.

மருதாணி விரல்களும் மையிட்ட விழிகளும் உன் ஸ்பரிசம் உணர்ந்தாற்போல் பரவசமடைகின்றன.

கன்னத்தின் நடுவில் வெதுவெதுப்பாக குப்பென புதுரத்தம் பாய்வதைப்போல் உணர்கிறேன்

விவஸ்தையற்ற அவஸ்தைகளை தந்த அக்கணத்தில் உன் ஆளுமையை அதிகமாக ரசித்தேன்.

பார்வையில் பயணித்தபடி, பாதையின் நீளம் மறந்து பாதத்தின் சுமை குறைக்கிறோம்.

அத்தனை சலனங்களினூடும் சருகுகளின் அசைவு ஏனோ இளையராஜாவின் இசையாய் ஈர்க்கிறது.

விடுதி வந்துவிட்டது,விடை பெறும் நேரம்… கவனமாக உன் பக்கம் பார்வை தவிர்த்து, உள்ளே செல்கிறேன், நீ என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்பதை உறுதி செய்துகொண்டே! :)

மீண்டும் நெஞ்சுக்குழியின் மையத்திலொரு குறுகுறுப்பு உன் பார்வையை நினைக்கும்போதெல்லாம்.

பின்னாளில் உணர்ந்துகொண்டேன் அது நம் நெருக்கத்திற்கான குறியீடென.

நாட்காட்டியில் இந்த நாளைப் பார்க்கும் போதல்லாம், விழிநிறைய கனவுகளும், இதழ்நிறைய கவிதைகளுமாக கடந்துபோன அந்த நொடியை அதே குறுகுறுப்புடன் மனம் நினைக்க மறப்பதில்லை.

அந்த பொழுதினை அப்படியே உறையவைத்து பத்திரப்படுத்திவைத்திருக்கிறேன் என் தலையனையின் கீழே, ஒவ்வொரு இரவும் அதை உணர்ந்தபின் உறங்கவேண்டுமென.

Saturday, November 9, 2013

என் இதயமே பேசு

கொஞ்சம் கேலி செய்கிறாய்

கொஞ்சம் என்னை வர்ணிக்கிறாய்

கொஞ்சம் நம் குழந்தைபற்றி

கொஞ்சம் நம் முதுமை பற்றி

குறுக்கிடத் தோன்றாது

குழந்தையாய் கதை கேட்கிறேன்,

உன் மடிசாய்ந்து கொண்டு!

தீராக் காதலை பேசிக்கொண்டேயிரு

காலம் தீரும் வரை.

காதலின் திகட்டலில் கண்மூடி விடுகிறேன்.


Sunday, October 27, 2013

ஹாஸ்டல் கலாட்டா

பொதுவா எல்லாரும் காலேஜ் லைஃப் மறக்கமுடியாதது, மிஸ் பண்ணிட்டோமேனு தான் ஃபீல் பண்ணுவாங்க.ஆனால் அந்த கேங்ல எல்லாரும் ஹாஸ்டல் லைஃபை மிஸ் பண்ணதுக்குத்தான் ரொம்ப ஃபீல் பண்ணாங்க, ஏன்னா அங்க அடிச்ச லூட்டியெல்லாம் வேறெங்க போயும் கண்டினியூ பண்ண முடியாதுல.

அப்படியே கண்ண மூடி ஸ்லோவா ஒரு கொசுவர்த்தியை க்ளாக் வைஸ் சுத்தினா, அந்த புகை மண்டலத்தின் முடிவில் கொங்கு மண்டலத்தின் பெயர் பெற்ற கல்லூரியொன்றின் லேடிஸ் ஹாஸ்டல் கேட் தெரிகிறது.

பல குடும்பங்களின் மாடர்ன் மாகலட்சுமிகள்  இருந்த/இருக்கின்ற/இருக்கப்போகின்ற இடம்.

ஃபர்ஸ்ட் இயர் ஃபர்ஸ்ட் டே, மம்மியைப் பார்த்த மந்திரி மாதிரி ரொம்ப பம்மி பம்மி உள்ள வரும் மாணவிகள் ஃபைனல் இயரில்  கட்சி தாவிய எம்.எல்.ஏ
போல் சவடால் விட ஆரம்பித்துவிடுவார்கள்.

சொர்ணக்கா மாதிரி வார்டன்  இருப்பாங்கனு நினைச்சா , இந்த வார்டன் மேடம் சாந்த சொருபம்.(அதுனால தான் கடைசிவரைக்கும் இந்த க்ரூப்பெல்லாம் ரொம்ம்ம்ம்ப நல்லவிய்ங்கனு சொல்லிட்டு இருந்தாங்க)

இதுவரைக்கும் ஹாஸ்டல் பத்தி கொடுத்த பில்டப்ஸ் போதும். இனி இந்தக் கல்லூரி வரலாற்றின் பக்கங்களில் கல்வியில் உயர்ந்தவர்களுக்கு இணையாக கலாய்த்தே உயர்ந்து தடம் பதித்த ஒரு க்ரூப்பை பத்தி பாக்கலாம். அவங்க வாங்குன பல்புகளும், கொடுத்த பல்புகளும் தான் இந்த கதையோட சாராம்சம்.

இந்த பேர்பெற்ற(பேர் என்னனு எடக்குத்தனமா கேட்காதிங்க,) கேங்ல மொத்தம் 10 பேர், அதுல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம் எதுலயும் ஒத்துக்காது, ஆனா கலாய்த்தல்ங்கற ஜீவநதி அவங்க ரத்தத்துல ஊறி அவங்களை இணைச்சுருச்சு. சொல்ல மறந்தாச்சு, இந்த கேங் பேர் “டேர் டெவில்ஸ்”. நெசமாத்தானுங்கோ, பேயெல்லாம் அலறி ஒடற அளவுக்கு இவிய்ங்க ரவுசு ஓவரா இருக்கும்.

மொத்தம் 12 டிபார்ட்மெண்ட் அந்த காலேஜ்ல, அதுல 3 டிபார்ட்மெண்ட் மட்டும் பொண்ணுங்களே இல்லாத பாலைவனம்.
மத்த எல்லா டிபார்ட்ல இருந்தும் ஒரு பொண்ணாவது ஹாஸ்டல் இருந்த்தாங்க, அவிங்க தான் “டேர் டெவில்ஸின்”  திறமையான உளவுப்பிரிவு. அவங்கவங்க க்ளாஸ்ல யாரெல்லாம் என்னென்ன காரணத்துக்காக திட்டு வாங்கறாங்க எவ்ளோ மார்க் வாங்கறாங்க எந்த பொண்ணுக்கு ரூட் விடறாங்கங்கற வரைக்கும் எல்லா விசயங்களும் ஹாஸ்டலுக்கு இந்த தானைத்தலைவிகள் மூலமாதான் தெரிய வரும்.எல்லா க்ளாஸ் அப்டேட்ஸும்  நம்ம டெவில்ஸ்க்கு அத்துபடி, ஆனா  இவுங்களாம் யாருன்னு தான்  யாருக்கும் தெரியாது.

அந்த கேங்ல ஸ்கூல் படிக்கிற பாப்பா மாதிரி ஒரு குட்டிப்பொண்ணு, (பார்க்க மட்டுந்தான்) சவுண்டு சரோஜாவோட ஒண்ணுவிட்ட சொந்தக்காரி, செளமியா. 50 டெசிபல்க்கு கம்மியா அவ பேசினதேயில்ல. வெட்டி வேரு வாசம் பாட்டு பாடி சிக்னல் கொடுத்தா, வெளக்குமாறு பேசும்னு  எதிர்பாட்டு பாடற ஆள் நம்ம செளமி.

காவேரி தண்ணிய எதிர்பாக்குற தமிழ்நாடு மாதிரி ஒரு பையன்  செளமியையே ரொம்ப நாளா பாத்துகிட்டே இருந்தான். நம்ம செளமியும் கர்நாடகா மாதிரி அப்பப்ப ஒரு லுக் விட்டுவிட்டு க்ராஸ் பண்ணுவா. அந்தப் பையனுக்கு நம்ம  கோலிவுட் ஹீரோ போல திடீர்னு ஒருநாள் தைரியம் வந்து யார்யாரையோ புடிச்சு செளமி நம்பர வாங்கிட்டான்.

கேர்ள்ஸ் ஹாஸ்டல்ல மொபைல் நாட் அலவ்டுனு ஒரு ரூல்ஸ். ரூல்ஸ் போடறதே அத பிரேக் பண்ணத்தான, சோ, நம்ம மக்கள் குறைந்தபட்சம் ஆளுக்கொரு செல்போனும், 4 சிம் கார்டும் வைச்சுருந்தாங்க.க்ளாஸ் டைம்ல ஸ்விட்ச் ஆஃப் பண்ணிவைச்சுட்டு,ரூமுக்கு வந்ததும் அதுக்கு உயிர் கொடுப்பாங்க.இந்த  செல்போன் ரகசியம் தெரியாம நம்ம பையன் ஒருவாரமா கால்பண்ணி பாத்து தேவதாஸா மாற க்வாலிஃபையாகிருந்தான்.

அப்ப,வேற எதொவொரு நல்ல உள்ளம், அவன்கிட்ட 5 மணிக்கு மேல ட்ரை பண்ணு மச்சினு சொல்லிருக்கு இவன் என்னடா இது, கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்பிடி ஓடும்னு யோசிச்சு கேட்டுருக்கான், அந்த நல்ல உள்ளமோ, “நம்பிக்கை, அதானே எல்லாம்” அப்படினு சொல்லிட்டு போய்டுச்சு. அப்றமா ஒரு நல்ல நாள்ல ப்ரோபோஸ் பண்ண ப்ளான் பண்ணி, 6 மணி வரைக்கும் கொஞ்ச நேரம் காலேஜ சுத்த, க்ரவுண்டுக்கு ஒரு ரவுண்டு போகனு டைம்பாஸ் பண்ணான்.

டெவில்ஸ் எல்லாம் கேண்டீன்ல அவங்க வட்டமேஜை மாநாட்ட முடிச்சுக்கிட்டு 6 மணி வாக்குல கூடு திரும்புனாங்க. இன்னிக்கு கொஞ்சம் போரடிக்குதுல்ல அப்படினு யோசிக்கும் போது செளமிக்கு ஒரு மிஸ்டு கால் வந்துச்சு, அடடா ஆடு சிக்கிருச்சேனு எல்லாரும் சந்தோசத்தோட செளமி கட்டில்ல வந்து உக்காந்துட்டு, அப்புறமா அந்த கால் அட்டெண்ட் பண்ணியாச்சு.பேசுறது இந்த பையன் தான் தெரிஞ்சதும்,லவுட் ஸ்பீக்கர்ல போட்டுட்டு பேச ஆரம்பிச்சுச்சு செளமி.

பையன் - செளமி.
செளமி- ம்ம், சொல்லு.
பையன் - உன்கிட்ட ஒண்ணு சொல்லனுமே.
செளமி(விரலால் சைகை காமித்து கிசுகிசுக்கும் டெவில்ஸை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு) - சரி, நாளைக்கு க்ளாஸ்ல சொல்லு.
பையன் - இல்ல,இல்ல நான் இப்பவே சொல்லனும்.
செளமி-- என்ன சொல்லு.
பையன் -- நான் உன்ன லவ் பண்றேன், நீயும் என்ன லவ் பண்ற???? பண்ணனும் !!!!!

இதுவரை சிரமம்பட்டு அமைதியைக் கட்டிக்காத்த டெவில்ஸ் எல்லாம் இப்போது கோரஸாக லவுட் ஸ்பீக்கரில் ”ஓ” வெனக் கத்த பையன் கொஞ்சம் ஜெர்க் ஆகிட்டான். ஆனாலும் வெளிய காட்டிக்காம, “ எனக்கு டைம் ஆச்சு, கெளம்பனும், அம்மா தேடுவாங்க” அப்படினு சொல்லி சமாளிச்சான்.

செளமி-(காது கேட்காத மாதிரி) என்ன!!!என்ன சொன்ன திரும்ப சொல்லு.

உடனே டெவில்ஸ் கூட்டம் திரும்ப கோரஸா, “ஆத்தா வையும், வீட்டுக்குப் போகனும், லவ் பண்றேனு சொல்லு”னு அமைதிப்படை ரஞ்சிதா குரலில் கத்தி ஒரே கலாட்டா.லைன் கட்டாயிடுச்சு,திரும்ப கால் பண்ண, சுவிட்ச் ஆஃப் :))

அன்னைக்கு மெஸ்ல மஷ்ரூம் பிரியாணிய விட இதுதான் ஹேப்பியான விசயம்.அதன்பிறகு அவனை கடக்கும் போதெல்லாம் இந்த கோரஸ் பாடி கலாட்டா பண்றதுக்கு மிஸ் பண்ணவேயில்ல,பித்தாகரஸ் தியரத்த மறந்தாலும் இந்த கோரஸை அவங்க லைஃப்க்கும் மறக்கல.

சரி சரி கடைசில செளமியும் அந்த பையனும் லவ் பண்ணாங்களா இல்லையானு கேட்கறிங்களா, அத அடுத்த போஸ்ட்ல சொல்றேன்.

Saturday, October 5, 2013

கண்கள் நீயே,காற்றும் நீயே----முப்பொழுதும் உன் கற்பனைகள்

வெகு சமீபத்தில் தான் இந்த பாடலை கேட்டேன்.முதல் தடவையிலேயே மிகப் பிடித்த பாடல்களில் ஒன்றாகிவிட்டது.GV மியூசிக்கில் சைந்தவி வாய்ஸ் எப்பவும் என் ஃபேவரைட். இந்தப் பாட்டு அதற்குச் சற்றுமிளைக்காமல் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துவிட்டது.

மெல்லமாய் பல்லவி ஆரம்பிக்கையில் மனதின் சஞ்சலங்களெல்லாம் சற்றே குறைந்தார்போலொரு உணர்வு. மழலைச் செல்வம் கிடைத்தப்பின் ஒரு பேதைப் பெண்ணுக்கு அதுவே அவளது உலகமாகி,காணுமிடமெல்லாம் தன் குழந்தையாய் தோன்றுகிறது.

   கண்கள் நீயே..காற்றும் நீயே, தூணும் நீ ..துரும்பில் நீ

  வண்ணம் நீயே ..வானும் நீயே, ஊணும்நீ ..உயிரும் நீ

பத்து மாத காலத்தின் பாரங்கள் தாங்கிய கனவிற்கு,உயிர் கொடுத்து தன்னுருக் கொண்ட சிசு முகம் பார்த்து நினைவாகும் நொடியில் அத்தனை ஏக்கங்களும் தீர்ந்து போகிறது-தாய்க்கு.

பல நாள் கனவே

ஒரு நாள் நனவே

ஏக்கங்கள் தீர்த்தாயே

”ஏக்கங்கள் தீர்த்தாயே”  என்கையில் மீண்டும் மீண்டும் அந்த வரியைக் கேட்க  ஏக்கமாகிவிட்டது.

சித்தாராவின் குரல் செவியில் சாரல் மழை.

வரிக்கு வரி அற்புதம் நிகழ்த்தியிருக்கிறார் தாமரை.

ஒரு தாயின் சுகவேதனையை,அவள் பெண்மைக்குப் பெருமை சேர்த்திடும் தருணத்தை மிக அழகாக,எளிமையாக அதே சமயம் வலி மாறாது எழுதியிருக்கிறார், தாமரை.

எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்

நான் தான் நீ ..வேறில்லை

மெல்லிய அதிர்வுடன் ஆரம்பிக்கும் அடுத்த வரிகள்,குழந்தையின் எச்சிலைக் கூட ரசித்துப் பார்க்கும் தாய்மனத்தின் அழகை உணர்த்தும்.

முகம் வெள்ளை தாள்

அதில் முத்தத்தால்

ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே

இதழ் எச்சில் நீர்

எனும் தீர்த்ததால்

அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே


தானுடுத்தும் ஆடைக்கு, தான் மானம் காத்ததற்காக நன்றி சொல்லாமல் தன் மகனுக்கு மெத்தையாய் போனதற்காக நன்றியோடு நினைத்துப் பார்க்கும் தாய்மையை என்னவென்று சொல்ல…


தோளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதிவேளை


கைக்குழந்தையின் அர்த்தமற்ற ஓசையை இசையாகவும், பொருளற்ற வார்த்தையை புது மொழியாகவும் பாவித்துப் பார்ப்பது தாய் மட்டுமே.

”ஈடில்லா என் மகன்” எனும்போது, சித்தாரவின் குரலில் தொனிக்கும் தாயின் பெருமிதமும்,கர்வமும் நமக்கும் தொற்றிக் கொள்ளும்.


பலநூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாக பலபல ஓசை செய்திடும்
இராவணன் ”ஈடில்லா என்மகன்”


தன் கண்பார்வையிலேயே வைத்துக் கொண்ட குழந்தை, நடை பயிலத் துவங்கும் நேரம் கொஞ்சம் பார்வையை விட்டு விலகினாலும் தவித்துப் போகும் தாய், பேசாமல் எந்த ஆபத்துமின்றி மீண்டும் பத்திரமாய் தன் கர்ப்பத்திலே வைத்துக்கொண்டாலென்ன., என நினப்பது இயல்பே.

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்



பெரும்பாடு பட்டு தான் பெற்ற மகன், தன் இதய தேசத்தின் அரசன் வாழ்வில் வெற்றி பெற, வெகுமதியாய் தன் ஆசியை விட பெரிதாய் வேறென்ன தர முடியும்-ஒரு தாயால்!.

கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை
உடல் சோம்பாது,பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

நைட் தூங்கறதுக்கு முன்னாடி ஹெட்செட்ல கேட்டுப் பாருங்க... you will like it :)

Tuesday, September 17, 2013

BMTC--Day2

DAY--2:

முதல் நாள் அனுபத்தின் காரணமாக , மறுநாள் நானே பாஸ் எடுத்துக்கொண்டேன்.

கண்டக்டர் பாஸ் - உடன் ஒரு 5 ரூபாய் டிக்கெட்டும் குடுத்தார் , நானும் திருமலை பிராசாதம் போல் பவ்யமாய் வாங்கி ஹேண்ட் பேக்கில் பத்திரப்படுத்திக் கொண்டேன்.

ரெண்டாவது பஸ் மாறி இறங்கும் வரை எந்த வில்லங்கமுமில்லை.

பனஸ்வாடி ஸ்டாப்-பில் இறங்கி ரோடு க்ராஸ் செய்து அடுத்த பஸ்-க்காக காத்திருந்தோம்.

வந்த ரெண்டு, மூனு பஸ்ஸையும் கலர் சரியில்லை , சீட் இல்ல போன்ற முக்கிய காரணங்களுக்காக நிராகரித்து விட்டு ஏகமனதாக ஒரு பஸ்ஸில் ஏறினோம்.

கண்டக்டர் வந்து டிக்கெட் கேட்டதும், பாஸை எடுத்து நானே ஒரு முறை சரி பார்த்து விட்டு காண்பித்தேன்.

அவர் கன்னடத்தில் எதோ கேட்டு விட்டு நகர்ந்து விட்டார்.

என்ன சொல்றாரு இந்த ஆளு ? என நான் எனக்குள்ளே கேட்டுக் கொண்டு திரும்பி விட்டேன்.

மறுபடியும் கண்டக்டர் வந்து , ஏதோ கேட்க , என் காதில் "ஐ.டி கார்டு இதியா ?" என விழுந்தது.

ஐ.டி கார்டா ? ஙே ...............

#BMTC பஸ்சில் இப்டியெல்லாம் செக் பண்றங்காளா, பரவாயில்லையே என மனமார BMTC யைப் பாராட்டினேன்#

உடனே கர்மசிரத்தையாக , என் பர்ஸை திறந்து அதிலிருந்து PAN கார்டை கையில் எடுத்து விட்டு நிமிர்ந்தால் , அதற்குள் கண்டக்டர் நகர்ந்திருந்தார்.

சரி அவர் வந்ததும் காட்டுவோம் என்று திரும்பிய வினாடியில் , என் மெடுல்லா ஆப்லங்கட்டாவில் ஒரு மின்னல் அடித்தது.

எதுக்காக கண்டக்டர் ஐ.டி கார்டெல்லாம் கேட்கிறார் என்று யோசித்து , அவர் கேட்டதை அப்பிடியே ஸ்லோ மோஷனில் ரீவைண்ட் பண்ணிப்பார்த்தேன்.
கண்டக்டர் கேட்டது இது தான் “ ஐது ரூபாய் டிக்கெட் இதியா ?”

சட்டென என் பாஸைப் பார்த்தேன். 45 ரூபாய் என அச்சிட்டிருந்தது. முதல் நாள் வாங்கிய பாஸில் 50 ரூபாய் போட்டிருந்தது.

அப்போது தான் என் மர மண்டையில் 1000 வாட்ஸ் பல்ப் ஒன்று எரிந்து எனக்கு ,புரிய வைத்தது, பாஸ் 45 ரூபாய் மதிப்புடையதால் , எக்ஸ்ட்ரா 5 ரூபாய் டிக்கெட்டும் சேர்த்து தான் குடுத்திருக்கிறார்கள்.

அந்த டிக்கெட் இல்லாமல் நான் 45 ரூபாய் பாஸ் மட்டும் காட்டியதால், இந்த 5 ரூபாய் டிக்கெட்டை தான் கண்டக்டர் கேட்டிருக்கிறார்.

அப்படியே யாரவது என் முகத்தை ஃபோட்டோ எடுத்திருக்க வேண்டுமே ... ஹ்ம்ம்ம் குடம் குடமாய் அசடு வழிந்து கொண்டிருந்தது.

நல்ல வேளை , அவரிடம் PAN கார்டை காட்டாமல் 5 ரூபாய் டிக்கெட்டை காட்டிவிட்டு , சுற்றும்முற்றும் யாரும் என்னை கவனிககவில்லை என்பதை உறுதிப்படுத்திவிட்டு என் புத்திசாலித்தனத்தை நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டேண்.

இருந்தாலும் , ”இந்தியாவிலேயே பஸ் கண்டக்டரிடம் , பான் கார்டை வெரிஃபிகேசனுக்கு காட்டிய முதல் குடிமகள்” என்ற பட்டத்தை மிஸ் பண்ணியதில் சற்று மன வருத்தம் தான்”..

பயணம் தொடரும்.....

BMTC- அனுபவம்

ஐ.டி ஆதிக்கதில் இருக்கும் பெங்களூர் வாசத்தில் 3 ஆண்டுகள் ஓடி விட்டது.
இந்த 3 வருடத்தில் தங்கியிருக்கும் ரூம், ஆபிஸ் & பஸ் ஸ்டாண்ட் , இதைத் தவிர வேறு எந்த இடங்களுக்கும் என் கண்களும், கால்களும் பழக்கப்பட்டதில்லை .
(அம்புட்டு நல்லவளா நீ ...னு கேட்கறிங்களா .. அதெல்லாம் இல்லை ...அவ்வளவு சோம்பேறித்தனம் ...)
இந்த ஹைடெக் சிட்டியின் அடையாளமான டிராஃபிக் & பொல்யூசனுக்கு நான் மட்டும் விதிவிலக்கா..
கேரியர் டெவலப்மெண்ட் என்ற பெயரில் , LINUX கத்துக்க ஒரு இன்ஸ்டிடியுசனில் ஜாயின் பண்ணினேன்.
அப்ப கூட அந்த கோர்ஸ் பத்தி எதாவது விசாரிக்கவோ, ஏன் ஃபீஸ் கட்டவோ கூட நான் அந்த ஏரியா பக்கம் தலைகாட்டவில்லை.
எல்லாம் என் சக நண்பன் சிவா தான் செய்தான்.

அன்று தான் எனக்கும் BMTC பஸ் கண்டக்டர்-களுக்கும் இருக்கும் ஏழாம் பொருத்தம் எனக்கு புரிய ஆரம்பித்தது....

DAY--1

ஓரு வழியாக முதல் நாள் க்ளாஸ்-க்கு கிளம்பி,ரூமிலிருந்து நானும்,என் நண்பர் குழாமும் (சிவா & நந்தா) பேசிக்கொண்டே பஸ் ஸ்டாப் வந்து சேர்ந்தோம்.
மனதிற்குள் ஒரு புதிய இடத்திற்கு போகிறோம் என்ற சிறு குழந்தையின் துள்ளல்.
பஸ்-க்கு காத்திருக்கும் இந்த இடைப்பட்ட நேரத்தில் உலக நடப்புகளை அலசி ஆரய்ந்து, இந்த் வருட பட்ஜெட்டை விமர்சித்து விட்டு, யார் டிக்கெட் எடுப்பது என்ற அதி முக்கியமான விசயத்தை மறந்து விட்டோம்.
பஸ்ஸில் ஏறிய பின், மொழி படத்தில் வருவது போல் நான் இந்த பக்கமும் , அவர்கள் அந்த பக்கமும் நின்று சைகை செய்து, இறுதியாக அவர்களே டிக்கெட் எடுப்பது என்று முடிவானது.

3 பஸ் ஏறி, மாற வேண்டியிருந்ததால் டெய்லி பாஸ் வாங்கி, சிவா அதை காட்ட , நான் “நண்பேண்டா” என்ற ரீதியில் நன்றி கலந்த லுக் விட்டு திரும்பினேன்.

ஜன்னல் வழியே ஹாயாக பராக் பார்த்துக் கொண்டு வந்தேன்.

அடுத்த ஸ்டாப்பில் இறங்கி கவனமாக சிவா-விடமிருந்து டெய்லி பாஸை வாங்கி வைத்துக் கொண்டேன்.

#முன் ஜாக்கிரதை#

மூவரும் அடுத்த பஸ் ஸ்டாப்பிற்கு போய்க்கொண்டிருந்தோம்.வழியில் எதிர்படுவோரையெல்லாம் எந்த வித பாகுபாடிமின்றி கலாய்த்துக்கொண்டே அடுத்த பஸ்ஸில் ஏறினோம். பஸ் ஏறியதும்,
தமிழினத்திற்கே உரிய ஆர்வமாய்(அவசரமாய்) சீட் பிடித்து , வெயில் படாமல் நன்றாக செட்டில் ஆகி விட்டேன். கண்டக்டர் வந்து டிக்கெட் கேட்டதும், (இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டேன் மனதிற்குள், என் முன் ஜாக்கிரதையை நினைத்து..) கெத்தாக ”பாஸ்” என்றேன்.அவர் சென்று விட்டார்.

பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்ப்பது போல் என்ற பழமொழி ஏனோ மனதில் வந்து சென்றது.அடுத்த அரை மணி நேரத்தில் ஸ்டாப் வந்தது.இறங்கி ரோடு கிராஸ் செய்து அடுத்த பஸ்சை பிடிக்க வேண்டும்.அங்கு தான் எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு பஸ்ஸில் ஏறியதும் அதே ஆர்வமாய் சீட் பிடித்து அமர்ந்த்து தான், தாமதம் .. கண்டக்டர் வந்து டிக்கெட் என்றார்.
நான் பாஸை எடுத்து அதே கெத்தாக காட்டினேன். அவரோ கன்னடத்தில் ஏதோ கேட்க , நான் விழித்தேன் ..

அவர் பேசியதில் எனக்கு தெரிந்த அறைகுறை கன்னடமும் மறந்தது.

திருதிருவென நான் விழிப்பதை பார்த்து அவரே விளக்கினார்.

ஏன் ஆண்களுக்கான பாஸை வைத்திருக்காய் என்பது தான் அவரது கேள்வி..

அப்போது தான் எனக்கு தெரிந்தது பாஸில் பெண்ணின் பொம்மை போட்டிருக்கும் இடத்தில் பன்ச் செய்திருக்க வேண்டுமென.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சிவா தான் பாஸ் வாங்கியதால் , கண்டக்டர் ஆண்களுக்கான பாஸை கொடுத்திருக்கிறார்.

இந்த பாஸ் செல்லாது, டிக்கெட் எடுங்க, அமைதியா வேற டிக்கெட் வாங்கிவிட்டேன் ...

பஸ்ஸை விட்டு இறங்கியதும் , சிவவும் நந்தாவும் என்ன விசயமென்று விசாரிக்க , நான் விவரித்தேன்.

உடனே நந்தா எங்க ரெண்டு பேரையும் பார்த்து , இதிலிருந்து என்ன தெரியுது? என்றார்.

நான் வேகமாக அந்த பாஸை நல்லா திருப்பி பார்த்துட்டு , அப்பாவியாய் ஒன்னும் தெரியலயே என்றேன்.

அப்போது தான் நந்தா தன்னுடைய தத்துவம் நம்பர் - 10002 -யை சொன்னார் , “யார் எது குடுத்தாலும் , அப்பிடியே வாங்கி வைக்க கூடாது”
நானும்,சிவாவும் , க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்……….

Friday, August 23, 2013

கீச்சு-aug23

தானாக பட்டுத் திருந்தும் வரை, “அனுபவம் என்பது எல்லோருக்கும் வெறும் வார்த்தை மட்டுமே.

நீ தோள் சாய்த்துக் கொள்ள இருக்கிறாய் என்பதினாலேயே,
கவலைகள் எனக்கு கணமாக தெரிவதில்லை.

உன்மத்தம் பிடிக்கச் செய்து விடுகிறது,
உன் முத்தம்..

உன் ப்ரியசகியாகிட வேண்டி,
உன் ப்ரியம் கேட்கும் யாசகி

எவ்வித எதிர்பார்ப்புமின்றி, 
என் கோபம் தாங்கிக் கொள்ள, 
என் பிடிவாதம் தணித்து விட, 
என்னை நானாக நேசிக்க, 
ஆகச்சிறந்த அடிமை ஒன்று தேவை.

சில உறவுகளை இழக்கும் போது தான்,
வாழ்க்கை முழுமைக்குமான பாடம் புரிகிறது,
சில நேரங்களில், வாழ்க்கையே புரிந்துவிடுகிறது..

என்ன சொல்லி பேச, என யோசித்து சொல்லும் 
"ஒற்றை “ஹாய்-ல் , அந்நியப்பட்டு போகிறோம், 
நீயும்,நானும்!

விவஸ்தையற்ற அவஸ்தைகளை தரும்,அக்கணத்தில் உன் ஆளுமையை மிக அதிகமாக ரசிக்கிறேன்!

நல்லவன் என்ற பெயரோடு, அடுத்தவர்களுக்காக வாழ்வதை காட்டிலும்; 
கெட்டவன் என்ற பெயரோடு, தனக்காக வாழ்வது சாலச் சிறந்தது!

தூக்கமற்ற இரவுகளும், பாரமான மனமும், 
உனக்கான என் இழப்புகளின் மீட்சியாய், 
இன்னும் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மெளனம் -- சம்மதத்தின் அறிகுறி மட்டுமல்ல... 
சங்கடத்தின் மறுமொழியும் கூட.

உனக்கும் எனக்குமான உறவை கொன்று விட்டேன்...
உன் மீதான பெயரிடாத என் உணர்வுகளை என்ன செய்ய…

எதிர்படும் ஒவ்வொருவரிடமும் கற்றுக்கொள்ள, ஏதாவது ஒன்று இருந்து கொண்டே தான் இருக்கிறது..

நீ காயப்படுத்துவதை கூட, என் பித்து மனம்
ஞாயப்படுத்தியே பார்க்கிறது!!

நீ தோள் சாய்த்துக் கொள்ள இருக்கிறாய் என்பதினாலேயே,
கவலைகள் எனக்கு கணமாக தெரிவதில்லை.

சுள்ளென அடிக்கும் வெயிலின் நடுவே
வந்து போகும் சாரல்,
நம் ஊடலின் நடுவே ,
நீ கேட்கும் ,
 “சாப்பிட்டியா?”-வை, நினைவுப்படுத்திப் போகிறது