Wednesday, June 26, 2013

...நானறியேன்...


காடு மேடு கடந்தாலும்,

கடைசியில் கடலில் கலக்கும்

நதியைப் போல்,

எங்கெங்கும் நிறைந்தாலும்,

மூங்கிலோடு கலந்து இசையாகும்,

காற்றைப் போல்,

நட்சத்திரங்களிடையே தனித்திருந்து,

இரவோடு இணையும்,

நிலவைப் போல்,

சிறு சிறு மோதல்களினால்,

உன்னை விட்டு நீங்கினால்,

இந்த ஜீவன் வேறு எங்கே போகும் ?

உன் உள்ளம் தவிர வேறிடம், நானறியேன் !!!Monday, June 17, 2013

மரமாகுமோ மனம்...நான் விலகி போகிறேன் என்பதன் அர்த்தம்,

நீ என்னை காயப்படுத்திக் கொண்டே இருக்கலாம் என்பதல்ல,

என் உணர்வுகளை உனக்கு புரியவைக்க நினைத்தே, 

என் முயற்சிகளின் மூச்சை நிறுத்திக் கொண்டிருக்கிறேன்..

என்னை ரணப்படுத்தி ரசிப்பதே வழக்கமானது உனக்கு,

காயம் மறந்து, கண்ணீர் துறந்து மீள முயல்வதே வாடிக்கையானது எனக்கு..

நேசித்த ஒரே காரணத்திற்காக , நித்தமும் உன் நலம் நாடுகிறேன்...

நீயோ உன் வார்த்தைகளால் என் சித்தம் கலங்கச் செய்கிறாய்...

யாருமற்ற கானகத்தில்,

மயானத்தின் மையிருள் பூசிய தனிமையில்,

உன்னையோ, உன் நலத்தையோ நினைக்கவில்லை நான்..

என்னை நானாய் மதிப்பவர்கள் மத்தியில்,

என்னை நேசிப்பவர்கள் அரவணைப்பில்,

உனக்காய் பரிதாபப்படுகிறேன்..

எக்கேடொ கெட்டுப் போ, என உதறிச் செல்ல

எத்தனையோ முறை எத்தனித்தும் முயலவில்லை என்னால்..

ஏனெனில் என் மனம் இன்னும் மரமாகவில்லை;

மனிதர்களை நேசிப்பதை நிறுத்தவில்லை !

Sunday, June 16, 2013

அனுபவம்

.
   தானாக பட்டுத் திருந்தும் வரை,

“அனுபவம்” என்பது எல்லோருக்கும் வெறும் வார்த்தை மட்டுமே.

Saturday, June 15, 2013

நீ உணர்த்தியது...

கவிதையும் கனவும் மட்டுமே காதல் அல்ல -- என்று

மீண்டும் ஒருமுறை புரிய வைத்தாய்..

உனக்கும் எனக்குமான, நம் நினைவுகளில் மூழ்கிடும் போது,

திடுமென உணர்கிறேன் --- அது வெறும் நினைவு மட்டுமே என்று..

உயிரில்லாத உறவுகளில் உணர்வுக்கு மட்டும் என்ன மதிப்பு ?

விழி திறக்கும் முதல் நொடியில் இருந்து,

ஊரடங்கி, உறக்கம் தேடும் அந்த நொடி வரை

திரும்பும் எங்கெங்கும் உன் பிம்பமே!

முப்பொழுதும் உனக்கென உருகி,

எப்பொழுதும் எனக்கென வாழ மறந்தேன்!!!


Saturday, June 8, 2013

சக மனிதனை நேசிப்போம்...

கட்டிட காடுகளுக்கு மத்தியில் கவலை ரேகையுடன் மனிதர்கள்...

கணிணியுடன் கலந்துவிட்ட பொழுதுகள்...

இயந்திர கதியில் உணவு வேளைகள்...

இறுக்கமான உறக்கங்கள்....

காற்றைப் போல் வேகமாய் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது..

திடீரென ஒரு நாள் , திரும்பிப் பார்த்தால் .....

தன்னந்தனியே நான் மட்டும் ,என் உலகத்தில் ....

எப்போதும் எதையோ தேடித்தேடி,

சாதித்திருப்பது இலக்கற்ற வெறுமை மட்டுமே....

தொலைத்து விட்ட நண்பர்கள் ..

இழந்து விட்ட புன்னகை ......

மறந்து விட்ட கருணை...

மரத்துப் போய் விட்ட நேசம்...

ஒரு சிரிப்பில் உதவிட

துளி கண்ணீரில் கலந்திட

ஆறுதல் சொல்லி அணைத்திட..

பெரிதாய் எதுவும் செய்திட வேண்டாம்...

சிறு புன்னகை போதும் ..

சக மனிதனை நேசித்திட.....

வீழ்வது எதுவாகிலும் உலகில்,

வாழ்வது நம் நேசமாகட்டும் பிறர் நெஞ்சில்...

உன்னை எதிர்பார்த்து.....

ஓராயிரம் பேர் என்னை சுற்றி இருந்தாலும் ,

மின்னல் ஒளியை போல் உன் நினைவு என்னை தாக்குகிறது.

அந்த ஒரு நொடியில் ,

இருக்குமிடத்தையும் மறந்து மனம் பறக்க தொடங்குகிறது !

நிலவின் வருகையில் தொடங்கி நீண்ட கதைகள்

சூரிய உதயத்திற்கு பின்னும் முடியாமல் ;

அரைகுறை மனதாய்

அலைபேசிக்கு ஓய்வு கொடுத்து முடிந்த அந்த நாட்கள்;

நினைவலையில் கண நேரத்தில் மோதும் போதெல்லாம்

ஆயிரம் அதிர்வுகள் அடுத்தடுத்து தாக்கும் இதயத்தை ;

சதா என்னை தவிக்க செய்யும் அதே கேள்வியுடன்!!!!

இமைகளின் தவிப்பை அறிந்து ,

இருக்குமிடம் தெரிந்து ,

கண நேரத்தில் தோன்றி கவலை மறக்க செய்த அந்த நொடிகள் ;

நொறுக்கி விடுகின்றன என் கோபத்தை!!

திரும்ப திரும்ப உன் முகம் பார்க்க ,

ஒரு முறையாவது உன் குரல் கேட்க ,

சிறு குழந்தையென அடம்பிடிக்கும் இதயம் ,அதை

சில்லு சில்லாய் உடைத்து விடாதே !

தயவு செய்து எனக்கும் கற்று கொடு,

ஆசையில் துடிக்கும் மனதையும்,

ஆவலில் தவிக்கும் கண்களையும்,

மற்றவர்களுக்கு தெரியாமல் எப்படி மறைப்பது என்று ?

நித்தமும் என் நெஞ்சில் சத்தமாய் கேட்கும் கேள்வியை ,

ஒரே ஒரு முறை உன்னிடம் கேட்கிறேன்,

"எப்போது வருவாய் கோபம் மறந்து,

கொஞ்சும் விழிகளுடன் நெஞ்சை நெகிழச் செய்ய ?”

உன் பார்வை

நீயும் ஒரு ரிஷியா?

எனக்கு இத்தனை உருமாற்றங்கள் தர உன்னால் மட்டுமே முடிகிறது...

உன் பரிதாப பார்வையில், 

நான் வயதை மறந்து சிறு குழந்தையாகிறேன்...

உன் கடைக்கண் பார்வையில்,  

என் இளமை உணர்ந்து இளைஞனாகிறேன்...

நீ பார்க்காமல் போய் விடும் கணங்களில், 

சுய நினைவற்ற வயோதிகனாகிறேன்..

ஆனாலும் இன்னும் காத்திருக்கிறேன்;

உன் காதல் பார்வை பட்டு,

நான் கடவுளாகும் அந்த ஒரு தருணத்திற்காக...


Friday, June 7, 2013

உன்னால்..தோள் சாய்த்துக் கொள்ள நீ இருக்கிறாய் என்பதினாலேயே,

என் கவலைகள் எனக்கு கணமாக தெரிவதில்லை.....

Wednesday, June 5, 2013

நம் உரையாடல்

மலரோடு காற்று

தென்றலாக பேசியது;

மண்ணோடு வானம்

மழையாக  பேசியது;

உன்னோடு நான் ஒவ்வொரு

நொடியும் இடைவிடாது

பேசிக்கொண்டிருக்கிறேன்;

மொழியின்றி,ஒலியின்றி

மெளனத்தினால்!!!