Friday, February 14, 2014

காதலர் தினம்

வறண்ட பாலைவனத்தில்,

கானல் நீர் தேடி  பயணித்திருந்தேன்.

வழிப்போக்கனாக அறிமுகம் ஆனாய்;

உன் அறிமுகம் என் முதல் வரம்.

தரிசான என் வாழ்க்கையை,பரிசாக மாற்றினாய்,

வழித்துணையாக என் பயணத்தில் இணைந்தாய்,

வாழ்க்கை இதுவென புரிய வைத்தாய்.

என்னுள் ஒளிந்திருந்த என் ரசனைகளை வெளிக்கொணர்ந்தாய்;

என்னை நானே ரசிக்க வைத்தாய்.

கானல் நீர் தேடலில்

காலம் கரைவதை கண்ணியமாய் உணர்த்தினாய்.

கையில் கிடைத்த பொக்கிஷத்தை,

கடலில் வீசி  காயப்படுத்தினேன்;

கலங்காமல் நின்றாய்.

உடைத்து நொறுக்கினேன் உன் இதயத்தை;

வார்த்தைகளால் உன்னை ரணப்படுத்திவிட்டு,

வலிக்கிறதா என்றேன்;

இல்லை காதல் இருக்கிறது என்றாய்.

கண்கள் பனித்து விட்டேன்!

நீ என் வாழ்வில் வந்த காரணம் புரிந்து கொண்டேன்.

ஒரு இலையுதிர் காலத்தின் இளவெயில் நேரத்தில்;

மெல்லிய சாரலுடன்,

மெய் மறக்கும் இசையில்,

வாழ்க்கைத்துணையாய் மாறியிருந்தாய்!


ஆம்! வழிப்போக்கனாக வந்து,

வழித்துணையாய் இணைந்து,

வாழ்க்கைத் துணையாய் நிலைத்து நின்றாய்!


எந்தவொரு கொண்டாட்டங்களிலும்

பெரிதாய் ஈடுபாடு இருந்ததில்லை எனக்கு;

உன்னை எனக்கு கொடுத்த உறவு காதல் ஆகி போனதால்,

சந்தோசத்துடன் நானும் கொண்டாடுகிறேன், காதலர் தினத்தை.

என்றென்றும் காதலுடன்

திவி



No comments:

Post a Comment