Saturday, October 5, 2013

கண்கள் நீயே,காற்றும் நீயே----முப்பொழுதும் உன் கற்பனைகள்

வெகு சமீபத்தில் தான் இந்த பாடலை கேட்டேன்.முதல் தடவையிலேயே மிகப் பிடித்த பாடல்களில் ஒன்றாகிவிட்டது.GV மியூசிக்கில் சைந்தவி வாய்ஸ் எப்பவும் என் ஃபேவரைட். இந்தப் பாட்டு அதற்குச் சற்றுமிளைக்காமல் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துவிட்டது.

மெல்லமாய் பல்லவி ஆரம்பிக்கையில் மனதின் சஞ்சலங்களெல்லாம் சற்றே குறைந்தார்போலொரு உணர்வு. மழலைச் செல்வம் கிடைத்தப்பின் ஒரு பேதைப் பெண்ணுக்கு அதுவே அவளது உலகமாகி,காணுமிடமெல்லாம் தன் குழந்தையாய் தோன்றுகிறது.

   கண்கள் நீயே..காற்றும் நீயே, தூணும் நீ ..துரும்பில் நீ

  வண்ணம் நீயே ..வானும் நீயே, ஊணும்நீ ..உயிரும் நீ

பத்து மாத காலத்தின் பாரங்கள் தாங்கிய கனவிற்கு,உயிர் கொடுத்து தன்னுருக் கொண்ட சிசு முகம் பார்த்து நினைவாகும் நொடியில் அத்தனை ஏக்கங்களும் தீர்ந்து போகிறது-தாய்க்கு.

பல நாள் கனவே

ஒரு நாள் நனவே

ஏக்கங்கள் தீர்த்தாயே

”ஏக்கங்கள் தீர்த்தாயே”  என்கையில் மீண்டும் மீண்டும் அந்த வரியைக் கேட்க  ஏக்கமாகிவிட்டது.

சித்தாராவின் குரல் செவியில் சாரல் மழை.

வரிக்கு வரி அற்புதம் நிகழ்த்தியிருக்கிறார் தாமரை.

ஒரு தாயின் சுகவேதனையை,அவள் பெண்மைக்குப் பெருமை சேர்த்திடும் தருணத்தை மிக அழகாக,எளிமையாக அதே சமயம் வலி மாறாது எழுதியிருக்கிறார், தாமரை.

எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்

நான் தான் நீ ..வேறில்லை

மெல்லிய அதிர்வுடன் ஆரம்பிக்கும் அடுத்த வரிகள்,குழந்தையின் எச்சிலைக் கூட ரசித்துப் பார்க்கும் தாய்மனத்தின் அழகை உணர்த்தும்.

முகம் வெள்ளை தாள்

அதில் முத்தத்தால்

ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே

இதழ் எச்சில் நீர்

எனும் தீர்த்ததால்

அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே


தானுடுத்தும் ஆடைக்கு, தான் மானம் காத்ததற்காக நன்றி சொல்லாமல் தன் மகனுக்கு மெத்தையாய் போனதற்காக நன்றியோடு நினைத்துப் பார்க்கும் தாய்மையை என்னவென்று சொல்ல…


தோளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதிவேளை


கைக்குழந்தையின் அர்த்தமற்ற ஓசையை இசையாகவும், பொருளற்ற வார்த்தையை புது மொழியாகவும் பாவித்துப் பார்ப்பது தாய் மட்டுமே.

”ஈடில்லா என் மகன்” எனும்போது, சித்தாரவின் குரலில் தொனிக்கும் தாயின் பெருமிதமும்,கர்வமும் நமக்கும் தொற்றிக் கொள்ளும்.


பலநூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாக பலபல ஓசை செய்திடும்
இராவணன் ”ஈடில்லா என்மகன்”


தன் கண்பார்வையிலேயே வைத்துக் கொண்ட குழந்தை, நடை பயிலத் துவங்கும் நேரம் கொஞ்சம் பார்வையை விட்டு விலகினாலும் தவித்துப் போகும் தாய், பேசாமல் எந்த ஆபத்துமின்றி மீண்டும் பத்திரமாய் தன் கர்ப்பத்திலே வைத்துக்கொண்டாலென்ன., என நினப்பது இயல்பே.

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்



பெரும்பாடு பட்டு தான் பெற்ற மகன், தன் இதய தேசத்தின் அரசன் வாழ்வில் வெற்றி பெற, வெகுமதியாய் தன் ஆசியை விட பெரிதாய் வேறென்ன தர முடியும்-ஒரு தாயால்!.

கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை
உடல் சோம்பாது,பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

நைட் தூங்கறதுக்கு முன்னாடி ஹெட்செட்ல கேட்டுப் பாருங்க... you will like it :)

1 comment:

  1. Excellent Dhivi. Ur explanation made the song more beautiful.

    ReplyDelete