Sunday, November 17, 2013

முதல் சந்திப்பு

அதுவொரு இலையுதிர் காலம்.
பச்சையும் மஞ்சளுமான சருகுகள் சாலையெங்கும் வர்ணம் வாரியிறைத்திருந்தது,
கல்லூரிச் சாலை கலகலப்பான உரையாடல்களை உள்வாங்கிக் ரசித்துக்கொண்டிருந்தது.
புத்தகம் சுமந்து புத்துணர்வு பரப்பி,விடுதி நோக்கி விளையாட்டாய் பேசியபடி இளம்பெண்கள் கூட்டம்.

தோழியொருத்தி உன் நிறம் குறித்துக் கேலிபேச, எதேச்சையாய் சென்றது விழிகள் உன்னிடம்.

முதல் பார்வை…..!  அதுநாள்வரை என் கண்கள் இந்த உலகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது, அன்றுதான் பார்வையைப் பெற்றது.

ஏற்கனவெ என்முகம் உனக்கு அறிமுகம் போலும், சிறு புன்னகையை இதழ்களில் தேக்கி, குறும்பு தவழ உன் கண்களால் பார்க்கிறாய்.

மிருதுவான பட்டாடையொன்றின் மீது, உரசிச்சென்ற பட்டாம்பூச்சி தன்சிறகினில் ஒருநொடி உயிர்ப்பித்துக்கொண்ட முன்ஜென்ம ஸ்பரிசம் வியாபித்திருந்தது நம்மிரு ஜோடி கண்களுக்கு இடைப்பட்ட வெளியில்.

ஓளியின் வேகம் தாண்டிய விழியின் வேகம் உன்னைப் பார்த்துவிட்டுத் திரும்புகிறது.

இத்தனை மாற்றங்களும் சுற்றியிருக்கும் ஒருவரும் அறியாமல் நமக்கு மட்டுமே பிடிபடுகிறது

கண்ணிமைகள் சிமிட்டுவதைவிடவும் அதிகமாக உன்னைப் பார்க்கத்துடிக்க,
ஒரு நானோ செகண்டில் மீண்டும் உன்னை நோக்கி பார்வை வீசுகிறேன், இம்முறை உன்னைச் சரியாய் பார்க்கவேண்டுமென.

உன் கேசம் கடந்து, நெற்றி வழிந்து வந்த பார்வை உன் விழியோடு மோதுகையில் சட்டென வேறுதிசை திருப்பிக் கொண்டேன்

வசமாய் மாட்டிக்கொண்டதால் உன்பக்கமாய் திரும்பவே கூடாதென நினைத்த கணத்தில், அனிச்சை செயலாய் விழி உன்னைச் சேர்ந்தது, அதையும் மீறிய தனிச்சை செயலாய் அங்கேயே நிலைத்து நின்றுவிட்டது.

அப்படியொன்றும் அழகனில்லை நீ, இப்படிச் சொல்லித்தான், உன்னைப் பார்க்கச் சொல்லி உந்தித்தள்ளும் மனதின் ஆவலை அடக்கிக் கொண்டேன்.

இது என்ன, உனக்குமான எனக்குமான இடைவெளியில் நம்மை இணைக்கிறதொரு வானவில்.

தோழிகளின் சிரிப்புச் சத்தம், வளையோசைகளின் அதிர்வு தாண்டி உன் உதட்டசைவை மட்டுமே, அக்கணத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன்.

மேகம் மழைபொழியும்,ஆனால் அன்று வானம் இதமாய் மேகம் பொழிந்தது.

நீயும் நானும் தூரத்தில்,நம் இதயங்கள் மிக அருகில்.

கொஞ்சம் கொஞ்சமாய் உன்னை பார்வையால் அளக்கிறேன்.
திறந்துவிட்ட சட்டையின் முதல் பட்டன்,என்னை கெட்டியாய் பிடித்துக் கொள்ள சற்றே தடுமாறி, நாக்கைக் கடித்து என்னை நானே திட்டிக் கொள்கிறேன்.

பிஞ்சுக்குழந்தையின் சிவந்தபாதத்தில் பட்டாம்பூச்சியொன்று பறந்ததைப்போல் நெஞ்சுக்குழியின் மையத்திலொரு குறுகுறுப்பு, உன் பார்வை என்னைத் தழுவிய நொடியில்.

அடப்பாவி ஏன் இப்படிப் பார்க்கிறாய் என அதட்டுகிற என் பார்வைக்கு நீ மட்டும் என்னவாம் என்ற பதில்பார்வை தருகிறாய்.

எந்தன் முகில்வண்ணத் துகிலும்,வெட்கம் தாளாமல் மெல்ல மெல்ல
இளஞ்சிவப்பாய் மாறிக்கொண்டிருந்தது.உன் ஒவ்வொரு விழிவீச்சுக்கும், மாறும் நிறத்தின் அடர்த்தி அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது.

ஹைய்யோ என நாணம் வழிய கழுத்துச் செயினைக் கடித்துக் கொள்கிறேன்.

திரும்பவும் என் வெட்கமுண்ணும் உன் கள்ளப்பார்வை.

மருதாணி விரல்களும் மையிட்ட விழிகளும் உன் ஸ்பரிசம் உணர்ந்தாற்போல் பரவசமடைகின்றன.

கன்னத்தின் நடுவில் வெதுவெதுப்பாக குப்பென புதுரத்தம் பாய்வதைப்போல் உணர்கிறேன்

விவஸ்தையற்ற அவஸ்தைகளை தந்த அக்கணத்தில் உன் ஆளுமையை அதிகமாக ரசித்தேன்.

பார்வையில் பயணித்தபடி, பாதையின் நீளம் மறந்து பாதத்தின் சுமை குறைக்கிறோம்.

அத்தனை சலனங்களினூடும் சருகுகளின் அசைவு ஏனோ இளையராஜாவின் இசையாய் ஈர்க்கிறது.

விடுதி வந்துவிட்டது,விடை பெறும் நேரம்… கவனமாக உன் பக்கம் பார்வை தவிர்த்து, உள்ளே செல்கிறேன், நீ என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்பதை உறுதி செய்துகொண்டே! :)

மீண்டும் நெஞ்சுக்குழியின் மையத்திலொரு குறுகுறுப்பு உன் பார்வையை நினைக்கும்போதெல்லாம்.

பின்னாளில் உணர்ந்துகொண்டேன் அது நம் நெருக்கத்திற்கான குறியீடென.

நாட்காட்டியில் இந்த நாளைப் பார்க்கும் போதல்லாம், விழிநிறைய கனவுகளும், இதழ்நிறைய கவிதைகளுமாக கடந்துபோன அந்த நொடியை அதே குறுகுறுப்புடன் மனம் நினைக்க மறப்பதில்லை.

அந்த பொழுதினை அப்படியே உறையவைத்து பத்திரப்படுத்திவைத்திருக்கிறேன் என் தலையனையின் கீழே, ஒவ்வொரு இரவும் அதை உணர்ந்தபின் உறங்கவேண்டுமென.

2 comments:

  1. அருமையான பதிவு... வியக்க வைக்கும் சொல்லாடல்....

    முக்கியமான வேண்டுகோள்;

    In settings -> Post comments -> Show word verification -> No

    என்று மாற்றுங்கள்...இல்லையேல் பல பின்னூட்டங்களை நீங்கள் இழக்க நேரிடும்... பெரும்பாலும் பின்னூட்டம் இடுபவர்கள் இதை விரும்புவதில்லை

    ReplyDelete